தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார்

120 ஆண்டுகளுக்கு முன் இந்தியை எதிர்த்த முதல் தமிழர்
 'தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார்

சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும்.  1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் நினைவு கூறி  வருகின்றனர்.

1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு   என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும்.

பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர்.  சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட "சேந்தன் செந்தமிழ்" எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது  என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது 'திருப்பா' எனும் சாத்திர  நூலில்  குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:

பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது

" இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் "

தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.
(திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு  இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம். வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து  பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களின் குருதி மரபில் வளர்ந்த ஒன்று என்பதற்கு இந்தச் சான்று ஒன்றே போதும்!

தில்லி அரசே!
இந்தியைத் திணிக்காதே!

#TNagainstHindi
#StopHindiImposition
#TNagainstHindiImposition

Tamilthesiyan.wordpress.com

கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்