அருள்மிகு இராமநாதர்


இராமேஸ்வரம்
அருள்மிகு இராமநாதர்
இராவணனைக் கொன்ற பெரும் பழி நீங்கும் பொருட்டு இராமபிரானால் எழுந்தருளுவித்து வழிபடப்பெற்ற கோயில் ராமேச்சுரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற அநுமார் திரும்பிவரக் காலந்தாழ்த்தமையால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த இலிங்கத்தை இராமபிரான் பூசித்தார். அவரே இராமநாதர் எனப் பெயர்பெறுவர். அநுமான் கொண்டுவந்த இலிங்கத்தை மூலலிங்கத்தின் வடபால் எழுந்தருள்வித்தார். அவரே விசுவலிங்கம் எனப் பெயர்பெறுவர்.
இறைவியாரின் திருப்பெயர் - மலைவளர் காதலி. இத்திருப் பெயரை ஞானசம்பந்தப்பெருந்தகையார் ``ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா`` என எடுத்து ஆண்டிருக்கின்றார். தீர்த்தம் - அக்நி தீர்த்தம், ராம தீர்த்தம், இலக்குமண தீர்த்தம், தனுக்கோடி முதலியன.
இது சோதி லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது என்னும் பெயர்பெறும். அங்கே இராமபிரான் தன் வில்லின் முனையால் தோண்டிய தீர்த்தம் தனுக்கோடியாகும்.
இராமேச்சுரத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. தூரத்தில் தனுக்கோடி இருக்கின்றது. சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குத்தான் செய்தல் வேண்டும். .
கல்வெட்டு:
இத்திருக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் வீரபாண்டிய தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன் இவர்கள் காலங்களிலும், விசயநகர மன்னர்களில் விசுவநாத நாயக்கர் வீரப்ப நாயக்கர் காலங்களிலும், வீரபூபதி காலத்தும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இவைகள் சகம் 1530 அதாவது கி. பி. 1608 இல் வீரபூபதி நாளில் இராமநாதர் கோயில் கட்டி முடிந்ததையும்; சகாப்தம் 1540 இல் அதாவது கி.பி. 1618இல் சேதுபதிகாத்த தேவர் புத்திரன் தளவாய் தேவன் குலசேகரனான சேதுபதிகாத்த தேவர், இறைவர் திருவிழாவிற்கு எழுந்தருளியிருக்க மண்டபம் ஒன்றைக் கட்டியதையும், சகாப்தம் 1540இல் சேதுபதிகாத்த தேவர் இராம நாதசுவாமி கோயிலின் முதற் பிரகாரம், திருநடமாளிகைப்பத்தி, ஆருட மண்டபம் கட்டியதையும், சகம் 1390 அதாவது 1468இல் பருவதவர்த்தினி அம்மன் கோயிலின் முன்புள்ள கொடிமரம் செய்து நிறுத்தி வைக்கப்பெற்றதையும் உணர்த்துகின்றன.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்