உடையார்குடி
உடையார்குடி, சோழ வரலாற்றில் இப்பெயர் மறக்கவியலாவொன்று. இன்றைக்கு 'வீராணம்' என்று அழைக்கப்படும் 'வீரநாராயணபுரம்' ஏரிக்கு அருகே, இன்று காட்டுமன்னார்கோயில் (சிதம்பரத்திலிருந்து கிட்டத்தட்ட 26 கிலோமீட்டர் தொலைவு) என அழைக்கப்படும் ஊர்தான் அன்று உடையார்குடி என்று அழைக்கப்பட்டது. கல்வெட்டுக்களில் 'வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர், அன்று சோழர்களின் பரம்பரை ஊர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குதான் திருமந்திரத்தை இயற்றிய திருமூலனார் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக வரலாற்றில், குறிப்பாகச் சோழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக விளங்குவது இங்குள்ள 'அனந்தீசுவரர் கோயிலில்' உள்ள கல்வெட்டுக்களாகும். இவையே 'உடையார்குடிக் கல்வெட்டுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில்தான் இராசராசனாரின் பெரிய பாட்டியான 'செம்பியன் மாதேவி'க்குத் திருமணம் நடந்தது. அவர் இக்கோயிலுக்குத் தன்பெயரால் நந்தாவிளக்கு அறக்கொடையாக அளித்துள்ளார். உத்தமசோழன் காலத்தில், அடிகள் 'பழுவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன்' என்ற பழுவூர் அரசன், தன் தம்பி 'கண்டன் சத்துருபயங்கரன்' என்பானின் ஆன்ம அமைதிக்காக நந்தாவிளக்கு வைக்க மானியம் வழங்கியுள்ளான்.
கோயில் முழுக்கக் கல்வெட்டுக்கள், அவையாவும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தெரிவிப்பவையாக உள்ளன. கோயில் சுற்றுச்சுவரிலுள்ள தெய்வச்சிலைகள் பெரும்பாலும் சிதைந்துள்ளன / சிதைக்கப்பட்டுள்ளன. முற்காலச் சோழர் காலத்தில் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய நந்தி, பிற்காலப் படையெடுப்புக்கள், சூறையாடல்களால் உடைத்தெறியப்பட்டது. ஆயினும், நந்தியின் தலை மட்டும் மிஞ்சியது. இந்தத் தலையை தென்புற திருச்சுற்று சுவரில் பதித்து வைத்துள்ளனர்.
இங்குதான், இராசராசனாரின் அண்ணனான 'ஆதித்த கரிகாலனைக்' கொன்றவர்களுக்கான தண்டனை விவரம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்விவரம் கோயில் கருவறையின் மேற்குப் புறத்தில் உள்ளது. அஃது,
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர"
என்பதாகும். இக்கல்வெட்டு, இராசராசனின் இரண்டாம் ஆட்சியண்டிலேயே பொறிக்கப்பட்டதாகும். கல்வெட்டு, பல்வேறு இடங்களில் 'சிதைக்கப்பட்டு'ள்ளன. இவை வரலாற்றை மறைக்கும் அக்கால / இக்கால முயற்சியாகவும் இருக்கலாம்.
கட்டாயம் அனைவரும் சென்று காணவேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இது.
Comments
Post a Comment