கர்ணன் வஞ்சிக்கப் பட்டானா
🌞தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.🌞வ்ருஷாகபி:..ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,
“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,
“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்
முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.
தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.
அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!
விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு,
விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா? தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின்
ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா?
மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.
அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.
வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.
கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.
“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால்,
முரண்பாடான சூழ்நிலைகளில் நாம்
சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்.
Comments
Post a Comment