அர்த்தமுள்ள பண்டிகை ஆடிப்பூரம்
இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை.
ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது.
வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது.
அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம்.
ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று.
பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது அதாவது பிரபஞ்சத்தின் பெரும் சக்திக்கு உகந்த நட்சத்திரம்.
அந்த தேவிக்கு உகந்த நட்சத்திரம் ஆடிமாதம் வந்த அன்றுதான் உமாதேவி அவதரித்ததாகவும் , மஹாலஷ்மியின் அருள் பெருகும் நட்சத்திரமாகவும் இந்து தர்மம் வலியுறுத்திற்று.
அந்த நாளில் ஒவ்வொரு பெண்ணும் அன்னையினை வணங்கவேண்டும் அதுவும் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தன்று விரதமிருந்து வணங்க வேண்டும் என்றும் இந்து ஞானியர் சொன்னார்கள்.
ஏன் சொன்னார்கள்?
அங்கேதான் இருக்கின்றது
ஆடிமாத போதனை.
ஆடிமாதம் அம்மன் வழிபாட்டுக்குரியது, பெண் சக்தியின் வழிபாட்டு மாதம் அது, அந்நேரம் பெண்கள் வெறும் வழிபாடு மட்டும் செய்யாமல் பல ஞான போதனைகளை, வாழ்க்கை தத்துவங்களை தெரிந்து கொள்ள வழி செய்தார்கள் இந்துக்கள்.
ஆடிபூரம் அன்று அன்னை உமாதேவியும், மஹாலெஷ்மியும் அவதரித்ததாக சொன்னார்கள், அதனில் இருந்து பெண்கள் படிக்க சொன்னார்கள்.
உமையவள் பெண்ணாக பூமியில் ஆடி பூரத்தில் அவதரித்தாள் அவள் கணவனுக்காக தவமிருந்து அடைந்த கதையினை சிந்திக்க சொன்னார்கள்.
அப்படியே மஹாலஷ்மி அவதாரம் பல எடுத்து பெருமாளை அடைய தவமிருந்ததை சிந்திக்க சொன்னார்கள்.
இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவன் முக்கியம், கணவன் மேலான பக்தி முக்கியம் என்பதை வலியுறுத்தினார்கள்.
சிவசக்தி தத்துவமும், பாற்கடலில் பரந்தாமனுக்கு சேவை செய்யும் லஷ்மியின் தத்துவமும் இல்லற வாழ்வின் போதனை என தெளிவாய் சொன்னார்கள்.
பெண்கள் இயக்கும் சக்தி ஆனால் அந்த இயக்கும் சக்தி இயங்க செயல்பட ஒரு நிலையான சக்தி வேண்டும் அதுதான் கணவன் என தெளிவாய் சொன்னார்கள்.
சக்தி சிவனை விஷத்தில் இருந்து காத்த கதையும், கண்ணனை ருக்மணி நரகாசுரனிடம் இருந்து காத்த கதையும் சொல்லி சிந்திக்க வைத்தார்கள்.
குடும்பபெண்ணின் முதல் கடமை கணவனை தொழுதல் என்பதையும், எல்லாம் வல்ல சக்தி கொண்ட தேவியரே கணவனை பணிந்து கடமை செய்தார்கள், ஆண் பெண் இணைந்த தாத்பரியமே இயக்கத்துக்கு அடிப்படை என்பதை போதித்தார்கள்.
உலக இயக்கத்துக்கே இறைசக்திகள் குடும்பமாய் இயங்கும் பொழுது, குடும்ப இயக்கத்துக்கு பெண்கள் கணவனுக்கு துணையாய் நிற்றல் வேண்டும் என்பதை தெளிவாக சொன்னார்கள்.
இதனாலே ஆடிபூரம் பெண்களுக்குரிய பெரும் போதனை நாளாயிற்று.
அன்று அம்மனுக்கு சேலையும் வளையலும் இதர மங்கல பொருட்கள் கொடுப்பதும் இந்துக்களின் வழமை குறிப்பாக மாங்கல்ய அடையாளம் உண்டு.
இந்த காணிக்கையில் இரு விஷயங்கள் உண்டு ஒன்று ஆத்மார்த்தமானது இன்னொன்று சமூகத்துக்கானது.
இந்த மங்கல பொருட்களை அன்னையின் பாதத்தில் வைத்து , இந்த மங்கலமெலலம் என் கணவனை குறிப்பது, இந்த மங்கல வாழ்வு உன்னால் வந்தது, காலமெல்லாம் இந்த மஞ்சள் குங்குமத்தையும் தாலியினையும் அன்னை நீகாத்து வரவேண்டும் என்பது.
அப்படியே தன் கணவனையும் அவனின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அன்னையிடம் அவனுக்காய் வேண்டி, குடும்ப வாழ்வின் எல்லா சிரமங்களையும் எதிர்கொள்ள சக்தி கேட்பது.
சேலையும் மங்கல அடையாளமும் குடும்ப பெண்களின் அடையாளம் மட்டுமல்ல..
அவளுக்கு கணவன் உண்டு அவனாலே இதெல்லாம் அவளுக்கு சாத்தியம் எனும் அடையாளங்கள்.
அவற்றை அம்மனுக்கு சாற்றும்பொழுது தன் மங்கல ஸ்தானத்தை கணவனின் அடையாளத்தையே அவள் அன்னையிடம் காணிக்கையாக்குகின்றாள்.
ஒரு பெண்ணாக அம்மனுக்கும் அதன் அவசியம் தெரியும் என்பதால் அன்னையும் அப்பெண்ணின் கோரிக்கையினை ஏற்றுகொள்கின்றாள்.
அன்னைக்கு சாற்றபடும் அந்த சேலையும் வளையலும் கயிலாயத்துக்கோ பாற்கடலுக்கோ செல்லாது மாறாக இன்னொரு ஏழை பெண்ணுக்கோ ஏழை சமூகத்துக்கோ சென்று சேரும்.
ஒரு பெண்ணுக்கு வரமருளி அவளிடம் இருந்து பெற்று இல்லாதோருக்கு கொடுக்கும் மிகபெரிய சமூகநீதியினை இந்து ஆலயங்கள அக்காலம் முதல் இக்காலம் வரை எளிதாக செய்கின்றன.
எந்த மதத்திலும் இல்லாதவாறு இந்துமதம் அந்த சமூக சமநிலையினை தெய்வத்தின் பெயரால் காக்கின்றது.
ஆடிமாதம் அம்மனுக்குரியது எனும் நாளில் அம்மனே தன் குடும்பத்தை பேணினாள், அப்படியே ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தை கணவனை தொழுது பேணவேண்டும் என உறுதியெடுக்கும் நாளாக இதனை இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள்.
இந்நாளில் அம்மன் வழிபாடும் பெண்களுக்கு சேலையும் தாலிதானமும் வழங்குவது வழமை, தானமும் தர்மமும் ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும், இன்னொரு சுமங்கலியிடம் இருந்து சேலையும் குங்குமம் தாலியும் வாங்கும் பெண் மனமார வாழ்த்தும் வாழ்த்து பெரும் ஆசிகளை கொடுக்கும்.
அதனாலே இந்நாளில் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பிறப்பும் இந்நாளில்தான் நடந்தது.
எல்லா பெண்களும் கணவனுக்காய் வாழ அவளோ கண்ணனையே கடவுளாக பாவித்து வாழ்ந்து அவனோடு கலந்தும் விட்டாள்.
இந்து ஆன்மீக தத்துவபடி ஒவ்வொரு ஆன்மாவும் இறைவன் மேல் ஏக்கம்கொண்டு வாழ்ந்து அவனை அடைய வேண்டும்.
ஆண்டாள் அப்படித்தான் வாழ்ந்தாள், உமையவள் அவதார நோக்கமும் அதைத்தான் பின்பற்றுகின்றது என்பார்கள்.
அதே நேரம் எல்லோரும் சித்தாந்தம் பேசி அதன்படி வாழ்ந்தால் உலக இயக்கம் நடக்காது அல்லவா?
அதனால் லவுகீகத்தோடு ஆன்மீகத்தை கலந்து இந்நாளில் பெண்கள் கணவனுக்காய் வழிபாடு நடத்தவும் மகா சக்தியின் அருளில் தங்கள் குடும்பத்தில் எல்லா வளமும் பெற பிரார்த்திக்க இந்துமதம் வலியுறுத்தியது.
குடும்ப கடமையினை செய்யும் பெண்கள் தங்கள் வாழ்வின் பலமான கணவனுக்கு எல்லா நலமும் அருளும் வேண்டி குடும்பம் நன்முறையில் இயங்க பிரார்த்திக்கும் நாளிது.
அதே நாளில் கடமை முடிந்து ஓயந்த தென்னையாக நிற்கும் பெண்கள் அந்த பரமனை அடைய ஆண்டாள் போல தவமிருக்கும் நாளும் இதுவே.
லவுகீகம் ஆன்மீகம் என இருபெரும் விஷயங்களை போதித்தபடி ஆடிபூரம் இன்று கொண்டாடபடுகின்றது.
அந்நாளில் பக்தி வழிபாடும் ஆலய வழிபாடும் அவசியம்.
அதே நேரம் இல்லாத பெண்களுக்கு தானமும் தர்மமும் அவசியம், ஒரு பெண்ணுக்கு எடுத்துகொடுக்கும் தாலியும் சேலையும் பல தலைமுறைக்கு குடும்பத்தை ஆசியாய் தாங்கும், அது சத்தியம்.
அவ்வகையில் ஒவ்வொரு இந்துவும் ஒரு இந்து பெண்ணுக்காவது உதவ வேண்டிய நாள் இது, அதை ஒவ்வொரு இந்துவும் செய்து புண்ணியம் தேடிகொள்ள வேண்டும்.
பெண்ணுக்கு தானமளிக்கும் ஒவ்வொரு விஷயமும் சாட்சாத் தேவி சக்தியினையே அடைகின்றது, பெண்களெல்லாம் அன்னையின் வடிவம் என வணங்கி தானம் செய்யவேண்டிய நாள் இது.
இந்த தர்மதாம் சனாதான தர்மத்தின் ஆணிவேர்.
இந்த தர்மம் எக்காலமும் இந்துக்களிடம் உண்டு, அங்கு சாதி இல்லை அந்தஸ்து இல்லை யாரிடம் கொடுக்கும் சக்தி உண்டோ அவர்கள் இன்னொரு இந்துவுக்கு கொடுப்பார்கள்.
வியபார சாதிகளும், போர்செல்லும் சாதிகளும், உழைக்கும் சாதிகளும் இந்நாளில் பிராமண ஏழைபெண்களுக்கு தானம் கொடுப்பதெல்லாம் அந்நாளில் வழமையான ஒன்று.
ஆம், உலகிலே சமத்துவமும் சமூகநீதியும் பேசிய முதல் மதம் இந்துமதம்.
அதன் ஏற்பாடுகளெல்லாம் அவ்வளவு ஞானமான சமத்துவம் கொண்டது.
அதை முறையாக பின்பற்றும் இடத்தில் எல்லா சமத்துவமும் சமூகநீதியும் எக்காலமும் இருக்கும் அங்கு ஏழ்மை என்பதோ இல்லாமை என்பதோ இராது, பெண்களுக்கு எவ்வித குறைவும் எக்காலமும் இராது.
அம்மதம் ஒன்றேதான் அந்த அற்புதத்தை செய்யும், காரணம் முழு ஞானத்தில் உருவான மதம் அது.
Comments
Post a Comment