மந்திரிப்பட்டினம்
மந்திரிப்பட்டினம் - சோழர் துறைமுகம்: ஆய்வில் கண்டுபிடிப்பு:
சென்னை: 'தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, மந்திரிப்பட்டினம் கிராமம், சோழர் காலத்தில், துறைமுகமாக இருந்திருக்கலாம்' என, தமிழ் பல்கலையின், கடல்சார் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தஞ்சை தமிழ் பல்கலையின், கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர், ராஜவேலு கூறியதாவது: தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் இந்திய தொல்லியல் துறையும் இணைந்து, கடல்சார் அகழாய்வுக்கு, 1.5 லட்சம் ரூபாயை ஒதுக்கின. அதை, மந்திரிப்பட்டினம் கிராம அகழாய்வுக்காக பயன்படுத்தினோம். பத்து ஆண்டுகளில் வெட்டப்பட்ட, இறால் பண்ணை குட்டைகளில், சோழர்கால நாணயங்கள், தொல் பொருட்கள் கிடைத்தன; அருகில் உள்ள ஊர்களின் பெயர்கள், அரசுடன் தொடர்புடையவையாக இருந்ததால், அந்த ஊரை, அகழாய்வுக்கு தேர்வு செய்தோம். அகழாய்வில், ராஜராஜன் வெளியிட்ட செப்பு நாணயங்கள், வீட்டின் தரைப்பகுதி, சுடுமண் குழாய்கள், சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், ஊது உலை, அரிய வகை மணிகள், ஆபரண தயாரிப்பிற்கான தங்க மூலப்பொருள், தங்கத்துடன் இணைக்கப்பட்ட, கார்னீலியன் மணி, செப்பு மோதிரங்கள், காதணிகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
இலக்கியத்தரவின்படி, பதிற்றுப்பத்தில் வரும், 'பந்தர்பட்டினம்' என்ற ஊரே, தற்போதுள்ள மந்திரிப்பட்டனம். பந்தர்பட்டினம் துறைமுகமாக இருந்ததையும், அதற்கும், ஈரோடு அருகே உள்ள, கொடுமணம் என்ற, கொடுமணல் கிராமத்திற்கும், தொடர்பு இருந்ததை, பதிற்றுப்பத்தின், 67வது பாடல் உள்ளிட்ட இலக்கியச் சான்றுகள் விளக்குகின்றன.
கொடுமணலில் தயாரிக்கப்பட்ட மணிகள், மந்திரிபட்டினத்தில், மதிப்புக்கூட்டி ஆபரணங்களாக மாற்றப்பட்டு, ஏற்றுமதி நடத்திருக்கலாம். அங்கு, கிடைத்த ரோமானிய நாணயங்கள், மந்திரிப்பட்டினத்தில் கிடைத்த ஊது உலை, தங்க மூலப்பொருட்கள் உள்ளிட்டவை, இதை உறுதி செய்கின்றன. மேலும், சங்க காலம் முதல், 16ம் நுாற்றாண்டு வரை, அனைத்து அரச மரபினரும், அத்துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ராஜேந்திர சோழனின் கடற்படையில், இத்துறைமுக வீரர்கள், கடாரம் உள்ளிட்ட போர்களில்பங்கேற்று இருக்கலாம்.
காரணம், இவ்வூரை ஒட்டி உள்ள, செம்பியன் மாதேவி, திருவத்தேவன், குப்பத்தேவன், செந்தலைப்பட்டனம் உள்ளிட்ட ஊர்கள், சோழ மன்னர்கள், அரசிகள், அதிகாரிகளின் பெயர்களை கொண்டதாக உள்ளன. இங்கு அதிகளவில், சோழரின் செப்பு நாணயங்கள் கிடைக்கின்றன.
சோழர் காலத்தில், கடற்கரையில் உள்ள நீர் தேக்கங்களில் இருந்து, கடலில் உள்ள மரக்கலங்களுக்கு, குடிநீர் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம்; காரணம், இங்கு கிடைத்துள்ள, குடிநீரை சேமிக்கும் பெரிய பானைகள், அவற்றுடன் இணைந்த சுடுமண் குழாய்கள் இதை உறுதி செய்கின்றன. அப்பகுதியில், தானயன்குளம் ஏரி, செம்பட்டன் ஏரி, திருத்ததேவன் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் தற்போதும் உள்ளன. இவற்றில் இருந்து, மந்திரிபட்டினம், கடந்த காலத்தில், துறைமுகமாக இருந்ததை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:
தினமலர்.
Comments
Post a Comment