சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையாரில் அமைந்துள்ள, 1000 வருடங்கள் பழமை யான கோயில் ஆகும். இங்கு மூலவர் -   சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம், தல விருட்சம் -   இலுப்பை, மற்றும் தீர்த்தம் -   பாணதீர்த்தம். இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார்.

கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, இலிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த இலிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு இலிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன். இதில் மரியாதைக்காக ஆர் விகுதி சேர்ப்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால் இவர் “சொரிமுத்து ஐயனார்” எனப்பட்டார். இங்கே சாஸ்தா சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில், பூர்ண, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிவிக்கின்றனர்.

பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் இருக்கிறது. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இது பக்தர்களின் காணிக்கையை சுவாமி, ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக இருப்பதாக சொல்கிறார்கள். இம்மரத்திற்கு கீழே சங்கிலிபூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றன. அருகிலேயே ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் இரண்டு யானைகள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதிகை மலை மீதுள்ள இந்தக் கோயிலில், ஆடி, தை அமாவாசை, கடைசி வெள்ளி, பங்குனி உத்திரம் விழா பிரசித்தம்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்