இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி

இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி "திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற" எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார்.

முழு மெய்க்கீர்த்தி

திருமன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
தன்பெருந் தேவிய ராகி யின்புற
நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர்வன வாசியும்

சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
பொருகட லீழத் தரசர்த முடியும்
ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்
முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10)

சுந்தர முடியு மிந்திர னாரமும்
தொண்டிரை யீழ மண்டல முழுவதும்
எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்

தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவிற் சினவி யிருபத் தொருகால்
அரசுகளை கட்ட பரசு ராமன்
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)

பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு
பீடிய லிரட்ட பாடி யேழரை
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு

முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30)

சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்

தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
இரண சூரனை முரணறத் தாக்கித்
திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40)

தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்

வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)

துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்

வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)

விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)

தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு..."

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்