கல்லணை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு
சர் ஆர்தர் காட்டன்
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.
கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளம் மற்றும் வறட்சியால் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.
இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறன் மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.
கரிகால சோழன் மணிமண்டபம்
பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை காலங்களை கடந்தும் பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழமையான இந்த அணையையும், இதை கட்டிய கரிகால சோழனையும் கெளரவிக்க கல்லணை அருகே மணிமண்டபம் அமைத்து கரிகால சோழன் சிலையும் அமைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்