மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு!

மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு!

1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து இசுலாமிய  மதச் சாயலோடு வெளிப்பட்ட போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை . தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும் இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப்போனது.

ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்படட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர்அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.

குறிப்பாக . மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வட திசையின் மீது மனச்சாய்வு கொண்டவர்களாக இருப்பதால் இந்திய விடுதலை வரலாற்றை தென் திசையிலிருந்து தொடங்குவதில்லை. இந்திய விடுதலை வரலாற்றை கால வரிசைப்படியும் எழுத மறுக்கின்றனர் .

ஆங்கிலேயர்கள் தென்பகுதியில் தான் காலடி வைத்து தங்கள் ஆதிக்கத்தை முதன்முதலாக நிறுவினர். அதன் பிறகே வடபுலம் நோக்கி நகர்ந்து , விரிந்த வணிகச் சந்தையை உருவாக்கினர்,

ஆங்கிலேயர்கள் தென் மண்ணில் நிலை பெற்று ஆதிக்கம் செலுத்திய போது பல்வேறு சிற்றரசுகள் ( பாளையப்பட்டுகள்) வரி வசூலிக்கும் முகவாண்மையாக  செயல் பட்டன. பின்பு வரி வசூலிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டு சிற்றரசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேயர் பறித்துக் கொண்டனர். அப்போதுதான் சிற்றரசுகள் சில விழித்துக் கொண்டு பொது எதிரி எனும் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்று படுகின்றன . இந்த ஒன்று படுத்துதல்  முயற்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.

 தூந்தாஜி வாக் (வட கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக்கர்  (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), மயிலப்பன், முத்துக்கருப்பர்  (இராமநாதபுரம்). ஞானமுத்து (தஞ்சை ) ஆகியோரோடு இணைந்து "தென்பகுதி கூட்டமைப்பை" முதன் முதலில்  உருவாக்கி ஆங்கிலேயப் படையினரை நிலைகுலையச் செய்த பெருமை மருது பாண்டியர்களையேச் சாரும்.

சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

 "ஜம்புத்தீவு ( நாவலந்தீவு என்பது தமிழ்ப் பெயர்) புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது.

 இதைப் படித்து ஆத்திரமுற்ற ஆங்கிலேய  அரசு மருது பாண்டியர்களின் உற்றார், உறவினர் ,மகன்கள், பேரன்கள் ஆகியோரை சிறை பிடித்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தது.அதன் பிறகு மருது பாண்டியர்  உள்ளிட்ட  500 பேர்  திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

மருது பாண்டியர்களும், ஏனையோரும் தூக்கிலிடப் படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கோர்லே (Gourley )எனும் ஸ்காட்லாந்துகாரர் ஒரு இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்:

"மருதுவின் அறிக்கை கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பி விட்டது. இதன் காரணமாக அவரது சீமைக்குத் தீ வைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் இருந்த ஆண், பெண் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடி பட்ட அனைவரையும் இராணுவ விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணைகள் சிறிது கூட மாற்றமின்றி கால தாமதமின்றி நிறைவேற்றப்பட்டன. மருது இராணுவ மன்றத்திடம், 'தனக்கு தயை எதுவும் காட்ட வேண்டாம்' என்று சொன்னார். நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டுள்ளேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறு செய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள்! இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?"

(கோர்லே எழுதிய நூலின் பெயர் : "Mahradu- An indian story of the begining of the ninteeth century- 1813, London)

மேற்கண்ட  மருதுவின் இறுதி உரையினைப் படிப்பவருக்கு அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர் தான் நினைவுக்கு வரும். அதில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என்று வேறுபாடின்றி கொடுங்கோலன் இராசபக்சே அரசால் கொன்று குவிக்கப் பட்டதையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனது குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டதையும் நெஞ்சில் ஈரங்கொண்டோரால் எப்படி மறக்க முடியும்?

ஆயுதமென்றால் என்னவென்று தெரியாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை கொல்ல உங்களுக்கு மனம் எப்படி வந்தது? என்று நாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதைப் போலத்தான் அன்றைக்கு இராணுவத்திடம் பிடிபட்ட மருதுவும் கேட்டுள்ளார்.

 24.10.1801இல் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட்ட பிறகும் ஆங்கிலேய அரசின் பழிவாங்கும் இரத்தவெறி அடங்கவீல்லை.

மருதுவின் எஞ்சிய வாரிசாகிய 15 வயதுடைய துரைச்சாமி உள்பட 73 பேரை மலேசியாவின் பினாங்கு தீவிற்கு (prince of wales island) 11.02.1802இல் நாடு கடத்த உத்தரவிட்டது.

1818இல் பினாங்கு சென்ற இராணுவத் தளபதி வேல்ஷ் என்பவர் துரைச்சாமியை பார்த்துள்ளார். அது குறித்து 'எனது நினைவுகள்' நூலில் பின் வருமாறு கூறுகிறார்: "உடல் நலம் குன்றிய தோற்றத்தோடு துரைச்சாமியை காண நேரிட்டது. இதைப் பார்த்த பொழுதில் என் இதயத்தில் கத்தி சொருகியதைப் போல உணர்ந்தேன்."

சிவகங்கையை  ஆண்ட மருது பாண்டியர்கள் அரசப்பரம்பரையினர் அல்ல. சிவகங்கையை சேதுபதி மன்னர் வழியாக ஆட்சி செய்தவர்கள் முத்து வடுக நாதரும், அவரது மனைவி வேலு நாச்சியாருமே. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியார் விருப்பத்தின் பேரில் படைத் தளபதிகளாக பொறுப்பு வகித்த மருது பாண்டியர்கள் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.

1800ஆம் ஆண்டுகளில் விவசாயிகளை கொடுமைப் படுத்திய மன்னர்கள் நிறையவே உண்டு. இதற்கு விதி விலக்காக மருது பாண்டிய மன்னர்கள் விளங்கினர். மருது பாண்டியர்களின் அரசு மக்கள் அரசாக குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகையாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர். அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருது பாண்டியர்கள் விளங்கியதை பேரா.கதிர்வேலின் "history of Maravas" நூலில் நரிக்குடி சத்திரச் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார்.

விவசாயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால் தான்  அவர்கள் விடுதலைப் போரை நடத்திய போது சிவகங்கை சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது . மருதிருவர் படை தஞ்சை நோக்கிச் சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என மார்க்சிய அறிஞர் கோ.கேசவன் அர்கள் "சமூகமூம் கதைப்பாடலும்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருது பாண்டியர்களின்  மாண்பினை உயர்த்தும் வரலாற்றுச் சான்றுகள் எண்ணிலடங்கா. பல சான்றாவணங்களை எடுத்துக் கூறியும் கூட, தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கங்கூடிய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவானது  (ICHR) மருது பாண்டியர்களின்  வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முதல் சுதந்திரப் போராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் செயலாகும்.

தென்னாட்டுக் கிளர்ச்சிகள்
(South indian rebellion- The first independance 1800-1801) எனும் நூலின் மூலமாக அதன் ஆசிரியர் இராஜய்யன் என்பவர் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR) மருது பாண்டியர் நடத்திய போரை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி  வருவதும் குறிப்பிடத்தக்கது.

"வட இந்தியத் தலைவர்கள் வான்புகழ் பெறுகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தும் அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாக உள்ளது. காரணம் தமிழர் தம்மவர்களின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையும் ஆகும்" என்று பேரா.ந.சஞ்சீவி எழுதிய "மானம் காத்த   மருதிருவர்" நூலின் அணிந்துரையில் மு.வரதராசனார் குறிப்பிடுவார்.

 மு.வ.வின் கூற்று முற்றிலும் உண்மை தானே? தமிழர்களே! நம் வரலாற்றை உணரப் போவது எப்போது?

(இன்று மருது பாண்டியர் தூக்கிலிட்ட நாள்
24.10.1801)

நன்றி:

"மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்" நூலிலிருந்து.

கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்