சிவாஜி கணேசன்

தமிழ்ப் பேரினத்தின், பெருமைமிகு கலை

அடையாளம். மன்னார்குடி வேட்டைத்திடல்

மண் பிறந்த சிவாஜி கணேசன் என்றொரு கலைப் பெட்டகம்.

கம்பீரத் தோற்றம், கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள்.

 வேட்டைத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயர், ராஜாமணி ஆகியோருக்கு பிறந்தவர் கணேசமூர்த்தி. வேட்டைத்திடல் சின்னையா கணேசமூர்த்தி என்பதே பின்னர் வி.சி. கணேசன் என்றானது. ராஜாமணி அம்மையார் விழுப்புரத்திலிருந்த தனது தந்தை வீட்டில் கணேசனைப் பிரசவித்த அதே நாள், சின்னையா மன்றாயர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்கள் சென்ற ரயிலுக்கு வெடி வைக்க முயற்சித்து கைதாகிச் சிறைக்குச் சென்றார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் வெளிவந்த நேரம், ராஜாமணி திருச்சி சங்கிலியாண்டபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார்.

பள்ளியில் படித்து வந்த கணேசன் தனது தந்தையுடன் இரவு நேரங்களில் சுதந்திரப் பிரச்சாரத் தெருக்கூத்துக்களுக்குச் சென்று வருவது வாடிக்கையானது. தனது எழாவது வயதில், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ கூத்துக்குக் கணேசன் சென்றிருந்த போது, வெள்ளைக்காரச் சிப்பாய் வேடத்துக்கு ஆள் தேவைப்பட்டதால் அங்கிருந்த சிறுவர்களைச் சிப்பாய் உடை அணியச் செய்து மேடையேற்றி விட்டனர். கணேசனின் முதல் மேடை அதுதான். வீட்டுக்குச் சென்றால் பாராட்டுக் கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் திரும்பிய கணேசனுக்கு வீட்டில் கிடைத்தது அடியும் உதையும் தான். எந்த விதத்திலும் வெள்ளையர்களுக்குத் துணை போகக் கூடாது என்ற கண்டிப்பில் சின்னையா மன்றாயர் கணேசனை மிகக் கடுமையாகத் தண்டித்தார். அதில் கோபம் கொண்ட கணேசன் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது திருச்சியில் நாடக முகாமிட்டிருந்த யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் குழுவில், தானொரு அநாதை என்று பொய் சொல்லிச் சேர்ந்து விட்டது அந்தக் குழந்தை. அந்தக் குழுவிலிருந்த காக்கா ராதாகிருஷ்ணன், கணேசனின் பக்கத்து வீட்டுக்காரர். அவரிடம் தான் பொய் சொல்லி நாடக கம்பெனியில் சேர்ந்த விஷயத்தைக் கூற இருவரும் சேர்ந்து அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து விட்டனர்.

இப்படித் தொடங்கிய நடிப்பு வாழ்க்கையில், சீதை, ராவணன், பரதன், சூர்ப்பனகை எனப் பலதரப்பட்ட வேடங்களில் நடித்துப் பிழைப்பு நடத்தி வந்தான் கணேசன். நாடகங்களின் முழு வசனங்களையும் அத்துபடியாகத் தெரிந்து வைத்திருந்ததால், எந்த நேரத்திலும், எந்த வேடத்தையும் ஏற்று நடிக்கும் திறன் பெற்றிருந்தான் கணேசன். சில ஆண்டுகளில் எம்.ஆர். ராதாவின் அறிமுகம் கிடைத்து, அவர் மூலம் அப்போது என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்து வந்த படத்தில் காமெடி நடிகர் தேவை என அறிந்து கணேசனும், ராதாகிருஷ்ணனும் வாய்ப்புத் தேடிச் சென்றனர். இயற்கையாகவே நகைப்புக்குரிய முகம் படைத்த ராதாகிருஷ்ணனுக்கு அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. சில நாட்களில் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவிலிருந்து விலகிய எம்.ஆர். ராதா, கணேசனையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். பின்னர் சில நாட்களில் எம்.ஆர். ராதா நாடகக் குழுவில் ஈரோட்டில் நாடகம் நடிக்கச் சென்ற போது, அவருக்குப் பெரியாரின் அறிமுகம் கிடைத்தது. எம்.ஆர்.ராதாவின் நாடகக் கம்பெனியில் சில காரணங்களால் பிளவு உண்டான போது, கணேசன் தன் குடும்பத்தினரைக் காப்பாற்ற ஒரு பஸ் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்ய நேர்ந்தது. பின் என்.எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவில் சேர்ந்து, அவர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை சென்ற போது கே.ஆர். ராமசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்தார், இந்தச் சமயத்தில் கே.ஆர். ராமசாமியின் நண்பரான அண்ணாதுரை தனது ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தின் நடிகர் கோபித்துக் கொண்டு போய்விட்டதால், இரண்டு நாட்களில் ஒரு நடிகரை உருவாக்கி நாடகம் அரங்கேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். கே.ஆர். ராமசாமி கணேசனைக் கொண்டு போய் நிறுத்தினார். முதல் பக்கத்தை மட்டும் படித்து விட்டு மறுநாள் வந்து நடித்து காட்டும் படி சொல்லி அனுப்பினார் அண்ணா. அடுத்த நாள் முழு நாடகத்தையும் படித்து விட்டு நடித்துக் காட்டினார் கணேசன். அதைப் பார்த்து அசந்து போன அண்ணா, கணேசனையே சிவாஜியாக நடிக்க வைத்தார். நாடகத்தைக் காண வந்த பெரியார், கணேசனின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைப் பார்த்து மயங்கி, வி.சி. கணேசனை, சிவாஜி கணேசனாக்கினார்.

கணேசனின் பல நாடகங்களைப் பார்த்திருந்த நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ.

பெருமாள் முதலியார் பராசக்தி நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க வாய்ப்புக் கிடைத்த போது, கணேசனையே நடிக்க வைப்பது என்று முடிவு செய்தார். இதற்குப் பல வித எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை அவ்வளவாக விரும்பவில்லை. மேக்கப் டெஸ்டுக்காகத் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர். திரைப்படத்தில் வரும் ‘சக்ஸஸ்!’ என்ற வசனத்தைப் பேசினார் கணேசன். ‘சக்ஸஸ்’ என்பது ‘சத்தத்’ என்று கேட்பதாகப் பலரும் குறை சொல்லிக் கணேசனைப் புறக்கணிக்க நினைத்தனர். ஆனால் பி.ஏ. பெருமாள் முதலியார் மட்டும், தான் படமெடுத்தால் கணேசனை வைத்துத் தான் எடுப்பது என்ற முடிவு செய்து விட்டிருந்தார். அவரின் திடமான தீர்க்க தரிசனத்தால் திரையுலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது இரண்டாவது படம் ‘பணம்’. இதுவும் அரசியல் நையாண்டி எனும் பாணியிலே அமைந்து விட்டது.

இதனால் அவர் அரசியல் நடிகர் என்ற கருத்து ஏற்பட்டுத் தொடர்ந்து கதாநாயகன் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதற்காகச் சோர்ந்து போகவில்லை சிவாஜி கணேசன். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார். பூங்கோதை என்ற படம் தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்கப்பட்ட போது, அ.நாகேஸ்வர ராவுடன், இரண்டாவது நாயகனாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து திரும்பிப் பார், அந்த நாள், ரங்கூன் ராதா போன்ற படங்களில் எதிர் குணங்களைக் கொண்ட நாயகனாக நடித்தார். எந்த வேடம் ஏற்றாலும், மக்களின் கவனத்தைத் தன் வசம் இழுக்கும் திறனை மேடை நாடகங்களில் கற்றிருந்த சிவாஜி கணேசன், திரையுலகிலும் இதனை நிரூபித்தார். முன்னூறுக்கும் அதிகமான படங்களில் நடித்த பின்பும், தான் ‘திரும்பிப் பார்’ படத்தில் நடித்ததைப் போன்ற சிரமத்தை, சவாலை வேறு எந்த படத்திலும் சந்தித்ததில்லை என்றொரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்..

‘மனோஹரா’, ‘உத்தம புத்திரன்’ படங்கள் சிவாஜி கணேசன் திரைப்பட வானில் வெற்றிக் கதாநாயகனாக, சிகரம் தொட்ட நட்சத்திரமாக ஜொலிக்க, படிக்கற்களாக அமைந்தன.

பின்னர் அவர் நடித்த அத்தனை படங்களிலும், எதோ ஒரு வகையில் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, தாக்கத்தை உண்டாக்கினார் சிவாஜி கணேசன். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைப்படக் கதாபாத்திரம் தான், அப்படி ஒருவர் இருந்தார் என்பதை இன்றும் நமக்கு நினைவூட்டுகிறது. கட்டபொம்மன் இப்படித்தான் இருப்பான் என்ற பிரமிப்பை உண்டாக்கியது. கர்ணனின் தாழ்வு மனப்பான்மையும், அதை மறைக்க அவன் காட்டும் வீரமும், கம்பீரமும், கொடைத் தனமும் சிவாஜி கணேசன் அன்றி அறிந்திருக்க மாட்டோம். இன்று வரை கர்ணனாக எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், அவர் காட்டிய கர்ணன் தான் நம் கண் முன் நிற்கிறான்.

‘திருவிளையாடல்’ சிவன் இப்படித்தான் பல அவதாரங்களில் உலகில் நடமாடுவாரோ என்று நம்மை நினைக்க வைத்தது. நமக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைப்பானா என்று ‘பாச மலரும்’, இப்படி ஒரு தோழன் கிடைப்பானா என்று ‘ஞான ஒளியும்’, நாட்டுக்கு இப்படி ஒரு காவலதிகாரி இல்லையே என்று ‘தங்கப் பதக்கமும்’, இன்னும் எத்தனையோ பாத்திரங்களில் சராசரி மனிதனைத் தன் நடிப்பின் மூலம் ஏங்க வைத்தவர் சிவாஜி கணேசன் எனும் மாபெரும் நடிகர்.

இன்று ‘பிரமாதம்’ என்று நாம் ஆர்ப்பரிக்கும் அனைத்தையும் தனது வெகு சில படங்களிலேயே நடத்திக் காட்டியவர் அவர். ஒன்பது வேடங்களில் நவரசத்தைக் காட்டி அசத்தினார். தொழு நோயினால் பாதிக்கப்பட்ட கதா பாத்திரத்தில் படல் படலாகப் பூசப்பட்டிருக்கும் ஒப்பனை மெழுகை மீறித் தெரியும் உணர்ச்சியை வேறு எந்த நடிகரும் இதுவரை காண்பித்ததில்லை. உயர்தரத் தொழிலதிபரின் நடை உடை பாணிகளை, தன் சரீர பருமனையும் கடந்து வெளிக் காட்டிய ‘புதிய பறவை’ கோபாலை மிஞ்சும் ஸ்டைல் எவரும் செய்ததில்லை.

இப்படிப் பல படங்கள்; பல முதன் முறைகள்; பல சாதனைகள். அந்நாளில் இருந்த பத்திரிகைகள் அவரை ஒரு நடிகனாகப் பார்ப்பதை விட்டு விட்டு, அவரைத் தனி மனிதனாக, அரசியலுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்து இந்த அற்புத நடிகனின் திறமைகளை கவனித்துப் பாராட்டத் தவறி விட்டது.

இன்றைய தலைமுறையினருக்கு அவரின் பல சாதனைகள் தெரியாமல் போய் விட்டது.

இரண்டு, மூன்று ஆண்டுகள் உடலை வருத்தி, உருவத்தை மாற்றி, இருபது நாட்கள் ஓடக் கூடிய படத்தை கொடுத்தவரல்ல அவர். பிரமாதமான முக ஒப்பனைகள் இன்றி, ஒரே உடல் தோற்றத்துடன் தன் நடிப்பின் மூலமே பாத்திரப் பரிமாணங்களைக் காட்டியவர். சில படங்களில் ஒரு சிறிய ஒப்பனையுமின்றி நடித்தவர். புகைப் பழக்கமுள்ள கதாபாத்திரங்களில் அவர் காட்டிய ஸ்டைல் தான் எத்தனை; ‘போலீஸ்’ என்று சராசரி பாத்திரங்களிலும், ‘பொலிஸ்’ என்று படித்த, மிடுக்கு நிறைந்த பாத்திரங்களிலும் அவரின் உச்சரிப்புப் பிரயோகங்கள் என்ன! கோவை வட்டார மொழி பேசிய முதல் நடிகரும் அவர் தான்! தமிழின் ஒரு எழுத்தைக் கூட பிறழாமல் உச்சரித்த ஒரே நடிகரும் அவர்தான்.

பெண்மை கலந்த நாடகக் கலைஞராக ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வேறுபாட்டைச் சன்னமாக வெளிப்படுத்தியவர். ஒவ்வொரு பாடல் காட்சிகளிலும் அவரது வாயசைப்பைக் கவனியுங்கள். நிஜப் பாடகரைப் போல நாபியிலிருந்து பாடுவதைப் போன்ற பாவம், தொண்டையில் தெரியும் ஏற்ற இறக்கங்கள்; இசை வாத்தியங்கள் மீட்டும் காட்சிகளில் கனக்கச்சிதமான முக, கையசைவுகள் … எதைச் சொல்வது எதை விடுவது.

கௌரவம் படத்தில் உடன் நடித்த ஒய்.ஜி. மகேந்திரன் ‘அந்தக் காலத்தில் செட்டிங் செலவுகளை மிச்சப்படுத்த இரட்டை வேடத்தில் நடித்த சிவாஜியைக் காலையில் மகன் பாத்திரத்தையும், மதியத்துக்கு மேல் தந்தை பாத்திரத்தையும் நடிக்கச் செய்வார்கள். காலையில் சிற்றுண்டி இடைவேளையின் போது ‘மகன்’ பேசும் அமைதியான, பயத்தினால் பாதிச் சொல்லைக் கூட விழுங்கும் தொனியிலேயே மற்றவர்களுடன் உரையாடுபவர், மதிய உணவு இடைவேளையில் தந்தை வேடத்தைப் போட்டுக் கொண்டு வந்து ‘தந்தை’ பாத்திரம் பேசும் அதே மிடுக்குப் பாணியில் அனைவருடனும் பேசுவார். படப்பிடிப்பு இல்லாத போதும், தான் நடிக்கப் போகும் பாத்திரத்தில் கவனம் வைத்திருப்பார் அவர்’ என்று குறிப்பிடுகிறார்.

சிவாஜி கணேசன் கடைசி வரையில் இயக்குனரின் நடிகனாகவே நடித்தவர். இயக்குனர் தன்னிடம் எதிர்பார்ப்பதை மட்டுமே கொடுக்கக் கூடியவர். பிற் காலங்களில் நடித்த ‘படையப்பா’வில் கூட இதைக் கடை பிடித்தவர் அவர். இயக்குனர் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடியுங்கள் என்ற போது. ‘நீ தாண்டா இந்த கப்பலுக்குக் கேப்டன். உனக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்’ என்று கேட்டு நடித்துக் கொடுத்தவர். எண்பதுகளில், மாறி வந்த திரைப்படப் போக்கை அறியாத இயக்குனர்கள் அவரின் நடிப்புத் திறனைச் சரியாக பயன்படுத்தத் தெரியாமல், சிவாஜி என்ற மனிதரின் பெயரை மட்டுமே பிரயோகித்து லாபம் அடையத் துடித்தனர். அப்பொழுது பத்திரிகையுலகம் ‘நடித்துக் கொண்டிருந்தவர் தடித்துக் கொண்டிருக்கிறார்’ என்று அவமானப் படுத்தியது.

ஆனால் பின்னர் பாரதிராஜா, கமலஹாசன் / பரதன் போன்றவர்கள் அவரின் நடிப்புக்குச் சவாலிட்ட பொழுது, சிம்மமெனச் சிலிர்த்தெழுந்தார். அவரது நடிப்புச் சகாப்தத்தில் அவர் செய்யாத சாதனைகள் கிடையாது.

ஒரே ஆண்டில் அவர் கதாநாயகனாக நடித்த பல படங்கள் வெளியானதைப் பற்றி அறிவோம். ஆனால் காலை, மாலை இரவு என மூன்று முரண்பட்ட கதாபாத்திரங்களில், மூன்று வேளையும் நடித்தவர். காலை 8 முதல் 1 மணி வரை கர்ணன், 2 மணி முதல் 6 வரை பச்சை விளக்கு இரவு 9 மணிக்கு மேல் ஆண்டவன் கட்டளை என்ற படங்களில் நடித்தாலும் மூன்றுமே வெள்ளி விழாப் படங்களாக அமைந்தன. அந்த மூன்று பாத்திரங்களில் வேறுபாட்டை நினைத்துப் பாருங்கள். வீரமான பாத்திரம் ஒன்று; குடும்பச் சிக்கல்களை எதிர் நோக்கும் சமூகப் பாத்திரம் ஒன்று; எல்லாவற்றையும் வெறுத்துத் தேடல் கொண்ட பாத்திரம் ஒன்று. ஒவ்வொன்றிலும் எத்தனை வீச்சு!

அது மட்டுமல்லாமல் ஏழு முறை, ஒரே நாளில் அவரது இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் நூறு நாட்களைத் தாண்டியதுண்டு. ‘சொர்க்கம் – எங்கிருந்தோ வந்தாள்’ ; ‘ஊட்டி வரை உறவு – இரு மலர்கள்’ என வசூல் சாதனைப் படங்களும் அதில் அடங்கும். ஒரு சமயத்தில் சென்னையில் மட்டும் அவரது 20 படங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

திரிசூலம் திரைப்படம் மூன்று திரையரங்குகளில், நூறு நாட்கள், ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் என ஹௌஸ் ஃபுல்லாக ஓடியது. அவரது படங்களில் 120 படங்கள் நூறு நாட்களைத் தாண்டியவை. 20 படங்கள் வெள்ளி விழாப் படங்கள்.

லூயிஸ் மாலே என்ற பிரெஞ்சு ஆவணப் பட இயக்குனர் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் ‘ஃபாண்டம் இந்தியா’ என்ற படம் இயக்க இந்தியா வந்திருந்த போது, இந்தியத் திரையுலகை, குறிப்பாகத் தமிழ்த் திரையுலகைக் கண்டு வியந்து போய் அவற்றைத் தனது ஆவணப் படத்தில் பதிவு செய்துள்ளார்.

சராசரியான மக்களைக் கொண்ட நாட்டில், பல வித ஒப்பனைகள் புனைந்து வரும் திரையுலகினர் எப்படி ஏற்றுக் கொள்ளப் படுகின்றனர் என்பதைப் பற்றியும் வியந்துள்ளார். அறுபதுகளில் வந்த தில்லானா மோகனாம்பாள் படப்பதிவின் தளத்துக்குச் சென்ற அவர், சிவாஜியின் நடிப்பை ‘ஜான் பால் பெல்மாண்டோ’ என்ற நடிகருடன் ஒப்பிட்டுள்ளார். (அறுபதுகளில் ஜான் பால் பெல்மாண்டோ செய்ததை சிவாஜி 52ல் செய்து ள்ளார்). மேலும் சிவாஜியை ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து அபரிமிதமாகச் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1960ல் ஆசிய, ஆப்ரிக்கக் கண்டங்களில் சிறந்த நடிகர் என்ற விருதினைப் பெற்று, அயல் நாட்டின் விருது பெற்ற முதல் நடிகரானார் சிவாஜி கணேசன் (வீரபாண்டிய கட்டபொம்மன்). கலைத் தூதராக அவர் அமெரிக்கா சென்ற போது நயாகரா நகரின் ‘நகரத் தந்தையாக’ ஒரு நாள் இருந்திருக்கிறார். பின்னர் அமெரிக்க நாட்டின் கொலம்பியா நகரம் அவருக்கு ‘சிறப்புக் குடியுரிமை’ அளித்து கௌரவித்தது.

1995ல் பிரெஞ்சு அரசாங்கம் தனது நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருதினை நடிகர் திலகத்துக்கு வழங்கிப் பாராட்டியது.

இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ (1966), பத்ம பூஷன் (1984), சிறப்பு தேசிய விருது (1992) என விருதுகளை அளித்த போதிலும் அவரது நடிப்பினைப் பாராட்டி, கௌரவிக்கத் தவறி விட்டது. எல்லாத் துறைகளிலும் புரையோடிப் போயிருந்த அரசியல், கலைத் துறையிலும் தலைவிரித் தாடியதே இதற்குக் காரணம். இறுதியில் அரசாங்கம் 1996ல் அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருதினை அளித்தது.

மற்ற நாடுகளில் தொலைக் காட்சி நடிகர்களின் ஆற்றலும், திறனும் வெளிப்படும் வண்ணம் அவர்களை நினைவு படுத்தி பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் எல்விஸ் ப்ரெஸ்லீ, மைக்கேல் ஜாக்சன், எலிசபத் டைலர் போன்றவர்களைப் பலர் நினைவில் கொண்டிருந்தாலும் சிவாஜி கணேசனின் பெயர் மறந்து போய் விட்டது என்றுதான் கூற வேண்டும். வரும் தலைமுறையினருக்கு அவரது பெயரையும் புகழையும் கொண்டு செல்லும் வண்ணம் அவரது ஒவ்வொரு திரைப்படத்தையும் பாதுகாத்து, அவரது புகைப்படங்கள், அவர் நடித்த பாத்திரங்களின் பின்னணி அறிந்தோரின் குறிப்புகள் போன்றவற்றைச் சேகரித்து ஒரு கலைக் கூடம் உருவாக்க வேண்டும்.

நடிப்புக் கலையின் மீது அவர் கொண்டிருந்த பற்றையும், காதலையும் உலகம் உணரும் வண்ணம் செய்ய வேண்டும்.

அவர் நடிப்பின் மீது கொண்டிருந்த பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு – சிவாஜி கணேசனின் குடும்பத்தோடு பல தலைமுறைகளாக நட்பு பாராட்டி வரும் குடும்பத்தைச் சார்ந்த நடிகர் மோஹன்ராம் நடிகர் திலகத்துடன் உரிமையோடு பழகக் கூடியவர். அவர் ஒரு முறை ‘அப்பா நீங்க எப்ப ரிடையர் ஆகப் போறீங்க?’ என்று கேட்ட பொழுது சிரித்து, பின் சில வினாடிகள் யோசித்து ‘நான் என்னைக்கு ஷூட்டிங்குக்கு லேட்டா போறேனோ, அன்னைக்கு ரிடையர் ஆயிடுவேண்டா’ என்று சொல்லி விட்டு எழுந்து நடந்து சென்றவர், நின்று திரும்ப வந்து ‘அன்னைக்கு நான் செத்துடுவேண்டா’ என்றாராம்!!

– ரவிக்குமார்.

அக்டோபர்_ 01,ஐயா  சிவாஜி கணேசனாரின் அகவை நாள்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்