தேவர் ஓர் இடதுசாரித் தலைவர்

பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் ஓர் இடதுசாரித் தலைவர்

     தோழர் கே.டி.கே. தங்கமணி நாடார்

அனைவரு‌ம் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை

நானும் எனது சக தோழர்களான ஜோதிபாசு,ஏ.கே. சென், பூபேஷ் குப்தா,  கிருஷ்ணன் மேனன், பெரோஸ் காந்தி அவர்களும் இங்கிலாந்தில் படித்து கொண்டிருந்த சமயத்தில், நேதாஜி அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வந்திருப்பதாக தகவல் கிட்டியது. இந்திய இளைஞர்களும், மாணவர்களும் ஒன்று திரண்டு நேதாஜி சென்ற இடமெல்லாம் வரவேற்பு கொடுத்த நேரம் அது. நேதாஜியை சந்தித்திட நாங்கள் அனைவரும் விரும்பினோம்.

ஆனால் என்னையும்,ஜோதிபாசு, ஏ.கே.சென், பூபேஷ் குப்தா,  கிருஷ்ணன் மேனன்
ஆகியோரையும் இங்கிலாந்தை விட்டு  வெளியே செல்லக் கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டது. எனவே எங்கள் அனைவரின் சார்பாகவும் தோழர் பெரோஸ் காந்தியை அனுப்பி அயர்லாந்திற்க்கு வந்திருந்த நேதாஜியை சந்தித்திடச் செய்தோம்.

நாங்கள் இங்கிலாந்தில் படித்து கொண்டிருந்த நேரத்தில் 1937 இல் இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. முதன்முதலாக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டதால் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். காங்கிரஸ் வெற்றி பெற்றதை லண்டன் பேப்பர்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன.

முக்கிய வெற்றி என்ற தலைப்பில் வி.வி.கிரி,
பொப்பிலி  ராஜாவைத் தோற்கடித்தார்; முத்துராமலிங்கத்தேவர் ராமநாதபுரம் ராஜாவைத் தோற்கடித்தார்; சக்திவேல் கவுண்டர் பி.டி. ராசனை தோற்கடித்தார் என பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தன.
பேப்பரை வாங்கி உரக்கப் படித்துக் கொண்டே ஓடி வந்தார் ஜோதிபாசு. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. திருப்பித் திருப்பி அந்த செய்திகளைப்  படித்தோம்.

நான் 1951 முதல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைவு வரை அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன். 1948 ஜனவரி முதல் 1951 ஜூலை வரை வேலூர் ஜெயிலில் இருந்தேன். 1951இல் தான் முதன்முதலாக தேவரை பார்த்தேன். திரு.எம்.என்.  ஆதிநாராயணன் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் என்னை பசும்பொன்னுக்கு கூட்டிச் சென்றார். காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை அவரது வீட்டு திண்ணையில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக  தேவர் பேசுவார்; அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பர் என்பர்.

ஆனால் அன்று நான் பேசுவதை தேவர் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார் அவரது வீட்டு திண்ணையில் வைத்து நாங்கள் யாவரும் சாப்பிட்டோம் அரசியல் தலைவர்களில் தேவர் அளவுக்கு Simplicity உள்ளவர்கள் மிகமிகக் குறைவு.
எந்த அறையில் இருந்தாலும் அங்கேயே துண்டை விரித்து படுத்துக் கொள்வார். எந்த சாப்பாடு ஆனாலும் எவ்வளவு மிக மிக எளிமையாக இருந்தாலும் சாப்பிடுவார். வேற்றுமை என்பது அவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை என்பது அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும்.

அந்தக் காலத்திலேயே சாதிய aminityக்கு மிகவும் பாடுபட்டவர் அவர். நான் அவரிடம் வெகுகாலம் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறேன் அருப்புக்கோட்டை தேர்தலில் எம. டி. ஆருக்கு (பார்வர்டு பிளாக் வேட்பாளர் எம்.டி. ராமசாமி செட்டியார்) நான்தான் கவுண்டிங் ஏஜென்ட். அதுபோல் தேவருக்கும் பின்பு மூக்கையா தேவருக்கும் என்னைத்தான் கவுண்டிங் ஏஜென்டாக இருக்கச் செய்தார்.

1952இல் முதுகுளத்தூர் தேர்தலிலும் தேவருக்கு நான்தான் கவுண்டிங் ஏஜென்ட். "தங்கமணியை கவுண்டி ஏஜென்டாக போட்டால் வெற்றி நமக்குத்தான் " என தேவர் அடிக்கடி சொல்வார். தேவர் ஒரு மிகப்பெரிய இடதுசாரித் தலைவர் இன்று அநேகர் அது சொல்வதில்லை. அவரை ஒரு சாதிய தலைவராக்கவே முயற்சிக்கின்றார்கள். அன்று காங்கிரஸ் அரசாங்கம் செய்த தவறையே இன்று அவரை மதிக்கின்றவர்களும் செய்கின்றார்கள்.

ராஜாஜியை திரு.வி.க.வை, பெரியாரை எப்படி புரஜக்ட் செய்கின்றார்களோ அவ்விதம் தான் தேவரையும் செய்ய வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செய்யும் சிறப்பு.

ராஜாஜியை பார்ப்பன தலைவர் என்பத, பெரியாரை நாயக்கர் தலைவர் என்பதோ, திரு.வி.க.வை முதலியார் தலைவர் என்பது எவ்விதம் பொருந்தாதோ அதுபோல் தேவர் அவர்களை தேவர் சமூக தலைவர் என்பதும் பொருந்தாது. அவர் ஒரு தேசிய இடதுசாரித் தலைவர். அப்போதைய இடதுசாரி தலைவர்களெல்லாம் தேவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், சீனிவாச ராவ் போன்றவர்கள் எல்லாம் தேவரின் சக நண்பர்கள். தேவர் எதையும் வெளிப்படையாகப் பேசுவார். ஒளிவுமறைவு அவரிடம் இருக்காது. கொள்கைப்பிடிப்புடன் இருப்பார். எதிராக செயல்படுவார் துணிச்சல் அவருடன் பிறந்தது என்று சொல்லலாம்.

1948ல் நான் வேலூர் சிறையில் இருக்கும்போது ஏ.கே கோபாலனும், வி.பி சிந்தனும் என்னுடன் இருந்தனர். அந்த சமயத்தில் தகுந்த காரணமில்லாமல் காவலர்கள் எங்களைத் தாக்கினார்கள். நாங்களும் அவர்களை திருப்பித் தாக்கினோம்.  பின்பு ஒரு சமயம் நான் தேவரிடம் இந்நிகழ்ச்சியைப் பற்றி சொன்னபோது அவர் மனதாரப் பாராட்டினார். அன்றைய காலத்தில் தேவர் ஒருவர்தான் அவ்விதம் மனம் திறந்து பாராட்டிய காங்கிரஸ் தலைவர். என் முன்பு ஜெயிலர் எனது மனைவியை பற்றி தாறுமாறாகப் பேசியதை தேவரிடம் சொன்ன போது "அவனை விட்டுவிட்டா வந்தாய் " என வெகுண்டு மனம் வருந்தி பேசினார்.

1936இல் தேவர் ராமநாதபுரம் அரிசன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். அரிஜன சேவா சங்கம் ஆரம்பித்த உடன் முதல் தலைவரே இவர்தான். அதன் பிறகும் தொடர்ந்து இவர்தான் தலைவராக இருந்தார். காந்திஜியின் விருப்பப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்திஜிக்கு ஆரம்பத்திலேயே தேவரை நன்றாகத் தெரியும். மதுரைக்கு
திரு. வைத்தியநாதையர் தலைவராக இருந்தார். தேவர்  எந்தக் காலத்திலும் சாதி வேற்றுமை பார்த்ததில்லை. முக்குலத்து மக்கள் எல்லாம் அன்று தங்களது தலைவராக போற்றிய ராமநாதபுரம் ராஜாவை காங்கிரஸ் இயக்கத்துக்காக எதிர்த்து நின்றவர் தேவர். அதன் மூலம் தன் தந்தையையும், குடும்பத்தையும் பகைத்தவர் அவர்.

ராமநாதபுரம் ராஜாவை எதிர்த்து நின்ற போது அவரிடமே நேரில் சென்று விவரத்தை எடுத்துச் சொல்லி அவருடைய ஆசியை கேட்டவர் தேவர். வேலுச்சாமி நாடாரை ராமநாதபுரம் மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக்கியவர். அன்று தேவரின் ஆதரவு பெற்றவர் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையில் அவர் வேலுச்சாமி நாடாரை வெற்றி பெறச் செய்தார். தேவருக்கு ஏராளமான பனை மரங்கள் உண்டு.  அனைத்தையும் அங்குள்ள ஏழை நாடார் மக்களுக்கு இலவசமாக கொடுத்து உதவியவர் தேவர் அவர்கள்.

வத்தலகுண்டு தேவர் விவசாயிகள் மாநாடு நடத்தினார் விவசாயிகளுக்காக பெரிதும் பாடுபட்ட தலைவர் அவர். ஒரு Left Movementன்  Spokesman. தமிழக அரசியலிலேயே Most Misunderstood man தேவர்தான்.
அவர் தீண்டாமையை எதிர்த்துப் பேசியவர் அவர் ஒரு தேசிய இடதுசாரி தலைவர்.

Madurai town Congress office was controlled by left forces. The chief architect was The bar. At the time, the district Congress was under the control of Rightist Congress leaders like N.M.R. Subbaraman and Vaithyanatha Iyer.

ஒருமுறை right wing, left wingன் control உள்ள Town Congress அலுவலகத்தை பிடிப்பதற்கு முயன்றதை தேவரிடம் சொன்னதும், அவர் "தில்லுமுல்லுகள் தொடருமானால் நாங்களும் வன்முறையில் இறங்க வேண்டியது வரும் " என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.  உடனே யாவரும் ஒதுங்கிக் கொண்டனர். திரு.குருசாமி, கே.பி.ஜானகி அம்மாள், எம்.எஸ்.மணி,
 எம்.ஆர்.எஸ். மணி,  செல்லையா போன்றோர் தேவரின் ஆதரவு கொண்ட இடதுசாரியினர்.

1938இல் பட்டிவீரன்பட்டியில் சௌந்தரபாண்டியன் நாடார் மகளின் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை கணேசன் (முன்னாள் நீதிபதி) எனது அண்ணன் திரு. சின்னமணி நாடார் அவர்களும் திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். பல பெரிய பெரிய பேச்சாளர்கள், தலைவர்களெல்லாம் பேசினார்கள். அன்று தேவரும் அங்கு பேசினார் என்றும், திருமணம் என்றால் என்ன? மாப்பிள்ளையும் பெண்ணும் எப்படி வாழ வேண்டும்? நமது பண்பாடு பாரம்பரியம் என்ன? என்பதைப் பற்றி மிகச் சிறப்பாக சற்றும் பிசிறின்றி  தேவர் பேசியதை எனது அண்ணன் பெருமையுடன் நான் லண்டனில் இருந்து வந்தவுடன் என்னிடம் கூறினார். காங்கிரஸ் இயக்கத்தில் தேவர் அளவுக்கு சிறப்பாக பேசக்கூடியவர்கள் மிகவும் குறைவு. மேடையில்  ஏறியவுடன் சிறிதும் தங்குதடையின்றி சரளமாக பேசுவார்.

தேவரும், ஜீவாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் இணைந்து பல கூட்டங்களில் பேசி உள்ளார்கள். அவர்கள் பேசும் கூட்டங்களில் கே. பி. ஜானகி அம்மாள் பாடுவார். தியாகராஜ பாகவதர் நாடகங்களில் நடிக்கும் போது அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜானகி அம்மாள்.

எனது அண்ணன் சின்னமணி நாடார் கடைசிவரை காங்கிரஸ்காரராக இருந்து மறைந்தவர் அவர் காங்கிரஸ் கட்சியில் தியாக தலைவர்கள் என மூன்று பேரை சொல்வார். 1.காந்திஜி
2.நேருஜி
3.தேவர்

நான் தேவருடன் பலமுறை உணவருந்தி இருக்கின்றேன். ஒருமுறை எங்களது வீட்டில் அவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். என் வீடு இடுக்குக்குள் இருந்ததால் தெருவின் முனையில் இருந்த வீட்டில் ஏற்பாடு செய்திருந்தோம்.

முதுகுளத்தூர் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம். தேவர்  டெல்லியில் இருந்தார். ஒருநாள் திடீரென்று தேவருக்கு சசிவர்ணத்தேவர் இடமிருந்து வரச்சொல்லி போன் வந்தது. தேவர் உடனேயே புறப்பட்டு போய் விட்டார். தேவர் அவர்களின் அறைக்கு நான் தினமும் காலையில் செல்வது வழக்கம். தேவர் காலையிலேயே எழுந்து விடுவார், நானும் அவ்விதமே எழுந்து விடுவேன். எங்கு சென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டு தான் செல்வார். சனி,ஞாயிறுகளில் வழக்கமாக ரிஷிகேசத்திற்கு  அவர் செல்வார். அப்போது சிவானந்தர் ரிஷிகேசத்தில் இருந்தார். அப்போது சிவானந்தர் ரிஷிகேசத்தில் இருந்தார். அவருடன் தேவருக்கு நன்கு பழக்கம் உண்டு. அங்கு செல்லும் போதும் என்னிடம் கூறியே  சென்றிருக்கிறார்.

ஆனால் அன்று சசிவர்ணத் தேவர்  அவர்கள் மிகவும் அவசரமாக கூப்பிட்டவுடன் அப்படியே சென்று விட்டார். நான் இதுபற்றி அவரிடம் பின்பு கேட்ட சமயத்தில் "போன் செய்து அவ்வளவு அவசரமாக கூப்பிட்டு விட்டார்கள்" எனக் கூறினார். அன்று என்னிடம் சொல்லி இருந்தால் நான் தடுத்திருப்பேன் அல்லது நான் உடன் சென்றிருப்பேன். தேவர் அன்று  செல்லாது இருந்திருந்தால் அன்று நடந்த அரசியல் சதி வலையில் அவரை சிக்க வைக்க முடியாமல் போயிருக்கலாம். சசிவர்ணம் தான் தொகுதி
எம். எல்.ஏ.  தேவர்  அருப்புக்கோட்டை எம்.பி.தான் அவரை அவ்வளவு அவசரப்பட்டு அழைக்க வேண்டாம்.

ஜட்ஜ் அனந்தநாராயணன் அவர்களிடம் ஒரு முறை நான் பேசினேன். அதற்கு அவர் இந்த கேஸ் என்னிடம் வந்தது நல்லதாகப் போய்விட்டது. "If you come to power, never involve your political opponent into an offence similar to 302, where the sentence could be death" என்றார்.

தேவர் அளவுக்கு அரசியல் சோதனைகளை சந்தித்தவர்கள் மிகவும் குறைவு. நாட்டின் சுதந்திரத்துக்காக, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக மிக அதிகமாக தியாகம் செய்த  தலைவர்களில் முக்கியமானவர்.

தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்று எடுத்துக்கொண்டால்

 பெரியார்
சிங்காரவேலர்
தேவர்

பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும், தேவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது காரணம் கம்யூனிஸ்டுகள் நேதாஜிக்கு எதிராக செயல்படுவது தான்.

அப்போது தேவர், Communists are materialist but I am a Idealist எனப் பேசினார்.

தேவர் அவர்கள் காமராஜின் முன்னேற்றத்திற்கு மிகவும் காரணமாக இருந்தார.  ராஜாஜி மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் அவரை வீழ்த்தி காமராஜரை காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் கொணர்ந்ததில் தேவருக்கு பெரும்பங்கு உண்டு. காந்திஜி இருந்த காலத்திலேயே ராஜாஜியை  எதிர்த்து அவருக்கு பதிலாக காமராஜரை ப்ரபோஸ் பண்ணக் கூடிய அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது.
தேவர் இளம் வயதிலேயே மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்தார. அவரின் மேடைப்பேச்சு அந்த இளம் வயதிலேயே மிகவும் நன்றாக இருக்கும. 1930க்கும் முன்னமேயே தேவர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் முழுநேர அரசியலுக்கு அவர் வரவில்லை. அவரை எப்படியும் முழுநேர அரசியலில் ஈடுபட வைத்து விட வேண்டும் என துடித்த பல காங்கிரஸ்காரர்களில் முக்கியமானவர்கள் காமராஜரும், சசிவர்ணத் தேவரும் ஆவர்.

திரு சசிவர்ணத்தேவர் மதுரைக் கல்லூரியில் எனது கிளாஸ்மேட் ஆவார். இளம் வயதிலேயே காங்கிரஸ் மீது பற்றுக் கொண்டவர்; பலமுறை சிறை சென்றவர. தேவரை முதுகுளத்தூர் கலவரத்தில் சம்பந்தப்படுத்தி விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நான் அந்தப் பகுதிகள் முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்தேன். பல இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் குறிப்பாக அந்த கலவரத்தை சாதிய கலவரம் என எண்ணி விவரம் இன்றி செயல்பட்ட இரு சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலரும், அவர்களுக்கு வேண்டியவர்களும் என்னை அரிவாளால் கூட தாக்க வந்தனர். அப்போது நான் மதுரை எம்பி நானும், மூக்கையா தேவர், மதுரை முத்துவும் ஒரு ஜீப்பில் கலவர பகுதிகளை சுற்றி வந்தோம்.

அப்போது ஒரு ஊரில் எங்கள் ஜீப்பை நிறுத்தினர்சிலர்; மூக்கையாத்தேவரையும், மதுரை முத்துவையும் யாரென்று தெரிந்ததும் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டனர். நான் தங்கமணி என்றவுடன், உடனே "நீ எப்படி இவர்களுடன் வந்தாய் " என்று கேட்டார் ஒருவர். "அவனிடம் என்ன பேச்சு, அவன் மூக்கை அருடா" என கூறினார். உடனே மதுரை முத்து "எவன்டா அவன்" என கோபத்துடன் கேட்டு கீழே இறங்கியதும் முறைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

கீரந்தை என்ற ஊரூருக்கு நாங்கள் சென்றிருந்தோம். அந்த ஊரில்தான் வைக்கோல் போரில் நெருப்பு வைத்து குழந்தைகளை நெருப்பில் தூக்கி போட்டதாக கூறப்பட்டது. நாங்கள் சென்ற ஊர்களிலெல்லாம் ஆண்களே  இல்லை பெண்கள் மட்டும்தான் இருந்தனர். நான் அப்போது அங்கிருந்த பெண்களிடம் விவரம் கேட்டபோது "எல்லோரும் வருகிறார்கள் பார்க்கிறார்கள் போகிறார்கள்" என விரக்தியோடு கூறினார். ஒரு பெண் மட்டும் விபரமாக பேசினார். அவரிடம் உனது கணவன் எங்கே எனக் கேட்டபோது பர்மாவுக்கு போய்விட்டதாகவும், குழந்தைகளைக் காணவில்லை என கண்ணீருடன் கூறிய நிகழ்ச்சி இன்னும் என் கண் முன்னே நிற்கின்றது.

போலீஸின் அராஜகம் கண்மூடித்தனமாக இருந்தது. அனைத்து தரப்பு அப்பாவி மக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். தேவருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை தவிர அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள். தேவரை அரிஜனங்களுக்கு விரோதி போல  Project செய்தார்கள். தேவர் அரிஜனங்களுக்கு விரோதமாக இருந்திருந்தால் அவர் ஒரு தேர்தலிலும்  ஒருபோதும் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. பெரும்பாலான மக்கள் தேவரைத்தான் ஆதரித்தார்கள். அப்பகுதி அரிஜன தொகுதியில் தேவரின் வேட்பாளர்தான் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்றார். அன்று அந்த மக்களுக்கெல்லாம் ஆதரவாக, தேவருக்கு உறுதுணையாக நின்ற இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிதான். சட்டசபையில் அண்ணா அவர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். ஆனால் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மதுரை முத்து மற்றும் உள்ளூர் திமுக பிரமுகர்கள் ஆதரவாக செயற்பட்டார்கள் ஆனால் தலைமை தீவிரமாக செயல்பட வில்லை. சட்டசபையிலும் அரசின் செயலை கண்டித்து சசிவர்ணத்தேவர் அவர்களுடன் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப்போட்டது  கம்யூனிஸ்ட் கட்சி. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லாம் சென்று ஜீவா அவர்கள் பேசினார்கள். தேவரை அரசியல் ரீதியில் வெற்றி பெற முடியாத காங்கிரஸ், சாதிவெறியைத் தூண்டி மக்களை பிளவுபடுத்துவதை வன்மையாக கண்டித்தார். அப்போது நான் எம்.பி.  நானும் பல பகுதிகளுக்குச் சென்றேன்.

தேவர் பசும்பொன்னில் இருக்கின்ற சமயங்களில் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரைப் போய்ப் பார்ப்பது வழக்கம்.  ஒருமுறை சத்தியமூர்த்தி அவர்களும் மற்றும் பல முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களும் பசும்பொன்னுக்கு வந்து தேவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் அவர்கள் உயிருடன் இருக்கின்றார். உக்கிரபாண்டி தேவர் அவர்கள் மிகவும் கம்பீரமாக, படோடபமாக  இருப்பவர். மிகவும் செல்வாக்கு படைத்தவர். ராமநாதபுரம் ராஜாவுக்கு மிகவும் நெருங்கியவர். காங்கிரஸ்காரர்களை அவ்வளவு விரும்புபவர் அல்லர்.  எனவே "எவன்டா அங்க, காங்கிரஸ் கீங்கிரனு கண்ட பயலுக எல்லாம் இங்க வந்துகிட்டு "  என பேசிவிட்டார். வந்துகொண்டிருந்த தேவரின் காதில் அந்த வார்த்தைகள் விழுந்துவிட்டன. அவ்வளவுதான் தந்தை என்று கூட பார்க்கவில்லை அவரை
 வெட்டவே போய்விட்டார்.  அந்த அளவுக்கு காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் பிரமுகர்கள் மீதும் பற்றுக் கொண்டிருந்தவர் தேவர். காங்கிரஸ் மீது தேவர் கொண்டிருந்த பற்று தான் அவரையும் அவரது தந்தையையும் இறுதிவரை சேரவிடாமல்  செய்து விட்டது.

தேவர் அளவுக்கு சிம்ப்ளிசிட்டி ஆக இருப்பது மிகவும் சிரமம் என்றேனே  அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு நாள் நான் எனது அறையில் இருக்கும் போது தேவர் என்னைப் பார்க்க அங்கே வந்துவிட்டார். நான் எதிர்பார்க்கவில்லை.  வந்ததும் என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நான் ஏற்கனவே கழிவறைக்கு செல்ல இருந்ததை உணர்ந்து கொண்ட அவர் என்னைச் சென்று வரச்  சொன்னார்.  நான் சென்று விட்டு திரும்பும் போது அந்த சின்ன அறைக்குள் தனது துண்டைத் தரையில் விரித்து கைகளை தலைக்கு வைத்து நன்கு தூங்கிக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் ஓடவில்லை. அவர் தரையில் படுத்து இருக்கின்றார்; பெரியவர். நான் எப்படி கட்டிலில் உக்காருவது என தவித்துக் கொண்டிருந்தேன். சத்தம் கேட்டு சிறிது நேரத்தில் எழுந்து விட்டார். பின்பு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
சாப்பாடு வகையிலும் அப்படித்தான் எவ்வளவு எளிமையான உணவாக இருந்தாலும் சந்தோஷமாக சாப்பிடுவார்; ருசியைப் பார்க்க மாட்டார்.

அருப்புக்கோட்டை இடைத்தேர்தலில் எம்.டி.  ராமசாமி அவர்கள் வெற்றி பெற்றவுடன், பொதுமக்கள் தேவர் இருந்த வீட்டிற்கு வந்து திரண்டுவிட்டனர். அப்போது நானும் அங்கு இருந்தேன். வெற்றி ஊர்வலத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதில் தேவரையும் எண்ணெயும் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர். அதற்கு தேவர் நானும், தங்கமணியும் கலந்துகொள்வது பெரிதல்ல. நாங்கள் பின்பு கலந்துகொள்கிறோம். இந்தத் தேர்தல் சில சமூகங்களுக்கு இடையில் சிறிதும்  பிணக்குகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்றவர் ராமசாமியுடன் திரு எம்.எஸ். பழனிச்சாமி அவர்களையும், காரின் இரு பக்கங்களிலும் அமரச்செய்து ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தார். மோதல் வந்துவிடக் கூடாது என தேவர் எண்ணிய மூன்று பெரிய சமூகங்களின் முக்கிய பிரமுகர்கள் அந்த 3 நபர்களும்.

வெற்றி பெற்ற திரு இராமசாமி அவர்கள் தேவாங்க செட்டியார் வகுப்பினர்; திரு எம்.எஸ். ராமசாமி அவர்கள் சாலியர் வகுப்பைச் சேர்ந்தவர்;  எஸ்.எஸ். பழனிசாமி அவர்கள் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். தேவர் அவர்கள் சமூக நல்லிணக்கத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து பாடுபட்டு வந்தவர். இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம். தீண்டாமையை எதிர்த்து பல கூட்டங்களில் பேசிய தேவர் பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்.

இன்று தீண்டாமையை எதிர்த்துப் பேசுவது புதிதல்ல. தீண்டாமை வேரூன்றி இருந்த காலத்தில் அதுவும் கிராமப் புறங்களில் அந்தக் காலத்திலேயே அதை எதிர்த்துப் பேசியவர். அரிசன சேவா சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலேயே சமபந்தி நடத்தியதில் முன்னோடியாக இருந்தவர். கமுதி போன்ற மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அரிசன ஆலயப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்வது என்பது அந்தக் காலத்தில் சாதாரண விஷயமல்ல அது தேவரால் மட்டும்தான் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதுபோன்று ஜமீன் ஒழிப்பில் தீவிரம் காட்டி முக்குலத்தில் செல்வாக்கு படைத்த பலரின் விரோதத்திற்கு ஆளானவர். காங்கிரஸ் கட்சியில் தீண்டாமை ஒழிப்பில் மிகவும் வேகமாக செயல்பட்டமைக்காக  காந்திஜியால் பாராட்டப்பட்டவர். எனவே அவரை சாதிய கண் கொண்டு பேசுவது சரியல்ல; அரசியல் உள்நோக்கம் கொண்டது.

காங்கிரஸ் இயக்கத்திலேயே கடைசி வரை இருந்த எனது அண்ணன் சின்னமணி நாடார் காங்கிரஸ் தலைவர்கள் படங்களை எல்லாம் பெட்ரூமில் போட்டிருப்பார். ஆனால் தேவரின் படத்தையும் காந்திஜியின் படத்தை மட்டும் பெட்ரூமில் வைக்கமாட்டார் ஹாலில்தான் மாட்டியிருப்பார். அதை ஏன் எனக் கேட்டதற்கு தேவரை போன்ற பரிசுத்த பிரம்மச்சாரியின்  படத்தை  பெட்ரூமில் மாற்றுவது சரி இல்லை என்பார். அந்த காலத்து காங்கிரஸ்காரர்கள் எல்லாம் அந்த அளவுக்கு தேவர் மீது மரியாதை வைத்திருந்தார்கள். தேவரின் தியாகத்திற்கு மதிப்பு கொடுத்தார்கள்.

மேடை மணி - ஏப்ரல் - செப், 1998

தொகுப்பு: க.பூபதிராஜா

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்