தெருநாய்


*💐தெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு💐*

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

*நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:*

“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.

தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.

கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளும்.

பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன. ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் *நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெருநாய்களாக்கிவிட்டோம்.*

நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள்.  எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.

ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி  விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், *நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.*

வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.

*இப்போது தெருநாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.*

 அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.

*இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும்.* குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல *நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.* 

*கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.*
எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.

பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.

நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப்                       பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.

தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். *நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.*

ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...

*🙏🏼👍நம் நாட்டு நாய்களை(தெருநாய்) இனியேனும் மதியுங்கள்🙏🏼👍*

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்