பராந்தகன்

பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினைப் பெற்றவன். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் தாயாவாள் கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர மங்கலச் செப்பேடுகளிலும், ஆனைமலை,திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் ஆற்றிய போர்கள்
கி.பி. 767 ஆம் ஆண்டளவில் பல்லவ அரசன் ஒருவனைக் காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில் போர் செய்து வெற்றி பெற்றுப் பின் ஆய்வேளையும், குறும்பரையும் கொங்கு நாட்டில் வென்றவன் பராந்தகன் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீவரமங்கலச் செப்பேடு கூறும் தகவலின் படி வெள்ளூர், விண்ணம், செழியக்குடி ஆகிய ஊர்களில் நடந்த போர்களில் பகைவர்களை பராந்தகன் அழித்தவனெனவும், காவிரி ஆற்றின் வடகரையில் ஆயிரவேலி, பயிரூர், புகழியூர் போன்ற இடங்களில் அதியமான் மரபினன் அதியமானைப் போரில் புறங்கண்டான் பராந்தகன் எனவும், அதியமானுக்கு உதவியாக சேர மன்னன் ஒருவனும், பல்லவ மன்னன் ஒருவன் வந்ததாகவும் இவர்களைத் துரத்திய பராந்தகன் கொங்கர் கோமானை வென்று புலவரைச் சிறையில் அடைத்து கொங்கு நாட்டு ஆட்சியைப் பெற்று விழிஞத்தை அழித்து வேணாட்டு அரசனைச் சிறைபிடித்து அவன் நாட்டிலிருந்து யானைகள், குதிரைகள், மற்றும் செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்து வந்து வெள்ளூரில் பகைவரை அடக்கி தென்னாடு முழுவதனையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தான் எனவும் அச்செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் ஆற்றிய பாதுகாப்புகள்
வெற்றி பெற்ற நாடுகளையெல்லாம் பாதுகாத்தும், குறுநில மன்னர்களைக் கண்காணித்தும் வந்திருந்தான் பராந்தகன். கரவபுரம் என்ற நகரில் அகழியும், மதிலும், கோட்டையும் அமைத்து அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலப்படையை வைத்தான் பராந்தகன். மேலும் அப்பகுதி திருநெல்வேலி வட்டம் உக்கிரக் கோட்டை என அழைக்கப்பெற்றது என களக்குடி நாட்டுக் கவந்தபுரம் என்ற கல்வெட்டுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பராந்தகன் ஆற்றிய சமயப் பணிகள்
பாண்டிய மன்னர் பெரும்பாலானோரும் சைவர்களாக இருந்தாலும் பராந்தகன் திருமாலை ணங்கியவனாவான். "பரம வைஷ்ணவன்தானாகி நின்றியங்கு மணிநீள் முடிநில மன்னவன்" என பராந்தகன் வைணவ சமயத்தில் வைத்திருந்த பற்றினைப் பற்றி சீவரமங்கலச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவன் ஆட்சிக் காலத்திலேயே பாண்டி நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த பராந்தகன் அவரிடம் அடியவராகவிருந்தான். கொங்கு நாட்டு ஆட்சியில் காஞ்சிவாய்ப் பேரூரில் திருமாலுக்கு குன்றமன்னதோர் கோயில் எடுத்தவன் பராந்தகனே. மேலும் இவனைப் பற்றிய செப்பேடுகள் பலவும் வைணவத் தர்ம சுலோகங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்