சீவல்லபன்

சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான்.மாறவர்மன்,ஏகவீரன்,பரசக்கர கோலாகலன்,அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான்.வரகுண வர்மன்,பராந்தகப் பாண்டியன் இருவரும் சீவல்லபனின் மகன்களாவர்.இவனது சிறப்புப்பெயரால் அவனிப சேகரமங்கலம் என்ற ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 'அவனிபசேகரன் கோளகை' என்ற பொற்காசை இவன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீவல்லபன் ஆற்றிய போர்கள்
புதுக்கோட்டை சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதுபடிசீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான் மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான்.மேலும் இவனது படை குண்ணூர்,சிங்களம்,விழிஞம்,ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.குடமூக்கில் கங்கர்,பல்லவர்,சோழர்,காலிங்கர்,மாசுதர் ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.
ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள்
ஈழ நாட்டில் முதல் சேனை அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களினைக் கொள்ளையிட்டான்.புத்த விஹாரங்களில் இருந்த பொற் படிமங்களையும்,பொருள்களையும் கைப்பற்றி வந்தான் என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்களவன் மலேயாவுக்குப் போனான்.இளவரசன் மகிந்தன் இறந்தான்.காசபன் ஓடிவிட்டான்.பணிந்து உடன் படிக்கை செய்து கொண்ட முதல் சேனனுக்கு சிங்களத்தை ஒப்படைத்தான் என சின்னமனூர் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டாம் சேனன் மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.சீவல்லபன் இருவரையும் வென்று நாட்டை விட்டுத் துரத்தினான் என மகாவம்சம் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள்
சீவல்லபன் பல்லவர்களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும் அவற்றுள் தெள்ளாற்றுப் போர்,குடமூக்குப் போர்,அரிசிற்கரைப் போர் என்பன சிறப்புடைய போர்களாகும்.கி.பி.836 ஆம் ஆண்டளவில் மூன்றாம் நந்திவர்மனுடன் சீவல்லபன் போரிட்டு தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான்.மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்டுல் குறிப்பிடப்பட்டுள்ளது.திருச்சி சென்னிவார்க் கோவில் கல்வெட்டும்,"தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.
பாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் தொண்டை நாட்டினை இழந்தான்.தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த சீவல்லபன் கோபங்கொண்டான்.தோல்வி மனதை வாட்டியது.தஞ்சை கும்பகோணம் அன்று குடமூக்கு என்றிருந்தது.குடமூக்குப் போரில் பாண்டியன் ஆற்றலுடன் போரிட்டான்;நந்திவர்மன்,உடன் வந்த கங்கர்,சோழர்,கலிங்கர் ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் நிருபதுங்கவர்மன் வாகூர்ச் செப்பேட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளான்.
நிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக அரிசிலாற்றங்கரை ஊராகிய அரிசிற்கரையில் போர் நடைபெற்று நிருபதுங்கவர்மன் வெற்றி பெற்றான்.வாகூர்ச் செப்பேடும் இதனைக் கூறும்.இதன்பின்னர் சோழ நாடு பல்லவர் ஆட்சிக்குள் வந்தது.லால்குடி,கண்டியூர்,திருச்சின்னம் பூண்டி,திருக்கோடிகா போன்ற ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் இச்செய்தியினைக் கூறும்.
கி.பி. 862 ஆம் ஆண்டில் சீவல்லபன் இறந்தான்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்