கலிங்கத்துப் பரணி கூறும் அக்கால அரசர் வாழ்க்கை

கலிங்கத்துப் பரணி கூறும் அக்கால அரசர் வாழ்க்கை------
கலிங்கத்துப் பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். இந்நூலில் அக்கால அரசர் இயல்புகளும் அக்காலப் போர் முறைகளும் சமுதாய நிலைகளும் கூறப்பட்டுள்ளது.
படைக்கலப் பயிற்சி------
அக்கால அரசர்கள் தினந்தோறும் படைக்கலப் பயிற்சி பெற்றனர். அவ்வாறு பயிற்சி முடிந்த பின் தம் அரையிலே (இடையில்) உள்ள உறையில் அதனைப் பூணும் வழக்கம் இருந்தது.
அரசவை------
அரசு வீற்றிருக்கும் போது அரசனின் தேவியரும் உடன் இருத்தல் வழக்கம்.
அரசனுக்கு சேவையாற்ற 'அணுக்கிமார்' எனப்படுவோர் இருந்தனர். இவர்கள் நாடகம், நிருத்தம் முதலியவற்றாலும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி எனும் நால்வகைப் பண்ணிலும் வல்லவர்களாய் ஆடல் பாடல்களில் சிறந்திருந்தனர். இவர்களும். யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவி வல்லார் பலரும் அரசவையில் ஒரு பக்கத்தே இருப்பர்.
அரசன் புகழ் பாடுவோராகிய சூதர், மகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதளிகர் என்போரும் அரசவையில் இருந்தனர்.
அரசனுக்குப் பிறர் விருப்பத்தை அறிவித்தும், அரசன் கட்டளையைப் பிறர்க்கு அறிவித்தும் ஒழுகுவோன் 'திருமந்திர ஓலையான்' எனப் பெயர் பெற்று அரசவையில் காணப்படுவான்.
பயணம்
அரசன் நால்வகைச் சேனைகளோடும் ஒன்று குறித்துப் பயணப்படுங்கால் மறையோருக்குத் கொடை முதலிய தருமங்கள் செய்வான். அச்சமயம் கவிவாணர்களுக்குப் பரிசுகள் அளித்துப் புறப்படுவான்.
பேரரசர் புறப்படுங்கால் அரசர் வாழ்கவென ஜெயஒலி முழக்கமும், மறையவர் மறைமொழு ஓதுதலும் அக்கால வழக்கமாகும்.
பயணம் செய்வோர் யானையூர்ந்தும், தேரூர்ந்தும், சிவிகையூர்ந்தும் செல்வர். சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பட்டது. அரசர் புறப்படும்பொழுது சங்கொலியோடு பல்லியங்களும் முழங்கிச் செல்லும். யானை மீது முரசதிர்ந்து செல்லும்.
அரசர்க்கு வழங்கப்படும் திறைப் பொருட்கள்------
பேரரசருக்கு பிற மன்னர்கள் திறையாக பல பொருட்களையும் கொண்டு வந்து இடுவர். மணி மாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச் சரடு, பதக்கம்,மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை முதலியனவும் வழங்கப்பட்டன.
திறைப்பொருளாக யானை,குதிரை,ஒட்டகம் முதலியனவும் வழங்கப்பட்டன.
இத்திறைப்பொருட்களை எருதுகளின் மீது ஏற்றிக் கொண்டு வந்தனர்.
பிறந்த நாள்------
அரசனுடைய பிறந்த நாளை மக்கள் சிறப்புடன் கொண்ண்டாடினார்கள். அரசனும் மக்கள் மகிழ்ச்சி கொள்ளுமாறு பல செயல்களைச் செய்வான்.
அரசனின் பிறந்த நாள் 'வெள்ளணி நாள்' என்றும் 'நாண்மங்கலம்' என்றும் பெயர் பெறும். குலோத்துங்கன் ஆட்சியில் ஒருநாள் போல் எந்நாளும் மக்கள் மகிழ்ச்சி பெருக இருந்தனர்
சிற்றரசர் இயல்புகள்------
பேரரசர் தம் கழலை அடைந்த சிற்றரசர்களுக்கு அஞ்சல் அளித்து தம் அடியினை அவர் முடி மீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
பேரரசர் யானை மீது ஏறும் போதும் தம் அடிகளைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கம் இருந்தது.
அமைச்சர்கள்------
பேரரசர்களின் அமைச்சர்கள் சிற்றரசர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். மேலும் சிற்றரசர்கள் அமைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகி வந்தார்கள் என அறியலாகிறது

Comments

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்