ஆங்கிலப்புத்தாண்டு------கிரெகொரியின் நாட்காட்டி

ஆங்கிலப்புத்தாண்டு------கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.
இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது. மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்