தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 4 கிமீ தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயில் மண்டபங்களின் மேல் கூரையிலும் தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள். ஒரு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள குட்டி 'மினியேச்சர்' சிற்பங்களும் உண்டு. இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலைத் தன் உயிரைக் கொடுத்துக் கட்டியிருக்கிறான் இந்த சோழ மன்னன். இவனுடைய முன்னோர்கள் ராஜராஜன் தஞ்சை கோயிலை 13 அடுக்கு கோபுரத்துடனும் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் 9 அடுக்கு கோபுரத்துடனும் சிவன் கோயில்களை அமைத்தனர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் ஐந்து அடுக்குகளுடன் ஐராவதேஸ்வரர் கோயிலின் கோபுரத்தை அடக்கமாக உருவாக்கினான். ஆனால் உள்ளே தேர்வடிவ முக மண்டபத்தை எழுப்பியும் காலத்தால் அழியாத அரிய சிற்பங்களையும் தூண்களையும் உண்டாக்கியும் தன் கலைச்செறிவினால் வரலாற்றில் தனியிடம் பெற்றான்.
ராஜராஜனும் ராஜேந்திரனும் "மகேஸ்வர சிவம்" என்னும் சிவனே உயர்ந்தவன் என்னும் கொள்கையைத் தழுவி, அதைப் போற்றும் வகையில் தங்கள் கோயில்களைக் கட்டினர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் பெண்ணின் பெருமையை கலையிலும் பக்தியிலும் உயர்த்தியவன். சோழர்கள் காலத்தின் இறுதிக்கட்டத்தில்தான் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதற்கு வித்திட்டவன் இரண்டாம் ராஜராஜன். தன் கோயிலில் வடக்குப் புறத்தில் முதன்முதலாக அம்மனுக்கு தனி சன்னதி அமைத்து தமிழ்நாட்டுக் கோயில்களின் சரித்திரத்தில் புதுமை செய்தான் என கோயிலின் உள்ளே உள்ள இந்தியத் தொல்பொருள் காட்சியகத்தில் செய்தி எழுதி வைக்கப்பட்டுள்ளது.
கோயிலைக் கட்ட ஆரம்பிக்கும்போதே பெண்கள்மேல் இருந்த தனக்கு இருந்த மதிப்பைக் காட்ட இரண்டாம் ராஜராஜன் முகமண்டபத்தில் இரு நடனமணிகளின் அழகான சிற்பங்களை உருவாக்கினான். கோயிலின் முகப்பில் விநாயகர் சன்னிதியும் அதன் மேலே பலிபீடத்திற்கு இட்டுச் செல்லும் தட்டினால் ஏழுஸ்வரங்கள் எழும்பும் ஏழுபடிகளும் அமைந்துள்ளன. அதன் இருபக்கங்களிலும் இந்த இரு சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் பெரிய நாயகி அம்மன் கோயிலின் உள்ளே மகாமண்டபத்தின் இடது, வலது பக்கங்களில் இரு எழில்மிக்க
வீரப்பெண்மணிகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் ராஜராஜன் விலங்குகளின் மேலும் பிரியம் கொண்டவனாக இருந்திருக்க வேண்டும். இந்திரனை சுமந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானைகள், ( கர்ப்பகிரகத்தின் தெற்கு வடக்கு நுழைவுகளில் காணப்படுகிறது), சிங்கங்கள் வேட்டையாடுவதுபோல அமைந்த யானைகள், அன்னப் பறவை, அன்னப்பட்சி, இரண்டு பாம்புகள் ஒரு எலியைப் பிடிக்கும் காட்சி, யானைகளுக்கு குழந்தைப் பிறக்கும் காட்சி என்று கல்லில் ஒரு விலங்குக் காட்சிச் சாலையை அமைத்திருப்பதும் நம்மை பிரமிக்க வைக்கும்.
துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்ற ஐராவதம் என்னும் வெள்ளை யானைத் தன் நிறத்தை இழக்கிறது. ஐராவதம் இந்திரனின் வாகனமாகும். பின் தாராசுரத்தில் சிவனைத் தரிசனம் செய்து அதன் சாபம் நீங்குவதால் இக்கோயிலில் சிவபெருமானுக்கு ஐராவதேஸ்வரர் என்னும் பெயர் வந்தது. கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இவற்றையே அனிமேஷனாகச் செய்து பல நூறு வாரங்கள் கார்ட்டூன் கதைகளாகக் காட்டலாம். மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கர்ப்பகிரகத்தில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு.
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் நம்மை அதிசயிக்க வைக்கும்.
மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் என நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார்.
மண்டபத்தின் மேல் நாயன்மார்கள், பிரகாரத்தில் சிவாச்சார்யார்களின் 108 உருவங்கள் ஆகியவை இறைவனைப் போற்றும் சிவனடியார்களை வணங்கும் சோழர்களின் பாரம்பரியத்தில் வந்தவன் இரண்டாம் ராஜராஜன் என்பதைக் காட்டும். பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்கள். சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட கிரானைட் சன்னல்களைப் பார்க்கலாம். அம்மன் சன்னதியில் பல பூக்களின் டிசைன்களை சுவர்களில் பார்க்கலாம். புடவைக் கடைக்காரர்கள் பார்த்து காப்பியடிக்க வேண்டிய டிசைன்கள்.
அம்மன் கோயிலுக்குப் பின்புறம் பட்டீஸ்வரம் சாலையில் வீரபத்திரருக்குக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரபத்திரர் சிவனின் ஜடாமுடியிலிருந்து அவ்தரித்ததாக கதைகள் கூறுகின்றன. இக்கோயிலின் கோபுரம் முழுதும் செங்கல்லால் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதன்முதலாக வெறும் செங்கல்லால் அமைக்கப்பட்ட முத்ல் பெரிய கோபுரம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நான் சென்றபோது மதிய வெய்யிலில் சூரியனின் வெளிச்சம்பட்டு கோபுரம் பளபளவென சிவப்பு நிறத்தில் மின்நியது. இங்குதான் தமிழ்க்காவியமான "தக்காயபரணி" என்னும் நூலைப் பாடிய ஒட்டக்கூத்தரின் சமாதி காணப்படுகிறது. பார்வதியின் அம்சமான தாட்சாயிணியின் தந்தையான தட்சணின் கதையே இந்த நூலாகும். ஐராவதேஸ்வரர் கோயிலின் உள்ளே திருவள்ளுவர் சிலையும் காணப்படுகிறது.
கோயிலில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் உள்ள மரபுடைமை மையங்களான சிதம்பரம், பூம்புகார், காரைக்குடி, செஞ்சி போன்ற இடங்களை 12 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து உல்லாசப் பயணத்தளங்களாக விரைவில் அரசு மாற்றும் என தொல்காட்சிப் பொருளகத்தின் நிர்வாகி கூறினார். தாராசுரத்தை உலக மரபுடைமை மையமாக அறிவிக்கப் போவது பற்றியும் அவர் பேசினார். உள்ளே சுவற்றில் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் செய்திகளை எனக்குத் தபால் அனுப்புவதாகச் சொன்னார். முடிந்தவரை நான் முக்கியமான செய்திகளை குறிப்பெடுத்துக் கொண்டேன். காட்சியகத்தை விட்டு கடைசியாகக் கீழே இறங்கும்போது அங்கு சுவற்றின் கீழ்ப்பகுதியில் மண்குடத்தை ஒருவர் தட்டி தாளம் எழுப்புவதாக ஒரு சிற்பம் காணப்பட்டது. அதுவே கடம் தோன்றியதின் தொடக்கமாக இருந்திருக்கலாம். இரண்டாம் ராஜராஜனின் இசை, கலை, இலக்கியம், பக்தி இப்படி எல்லாவற்றையும் அங்குள்ள சுவர்கள், தூண்கள், சிற்பங்கள், சிலைகள் சொன்னாலும் எனக்கு பிடித்தது அவன் பெண்மையை அதன் சக்தியை தெய்வமாக தனியாகக் கோயில் கட்டி முன்னோடியாக வழிபாடு செய்ததுதான்
Comments
Post a Comment