ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்  இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார்.

பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான ஹஸ்தமாலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். தமது 32ஆம் அகவையில் மரணம் அடைந்த இவர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

காலம்
கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

தத்துவம்
பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

துறவறம்
தமது நான்காம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மனீஷா பஞ்சகம்
தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

சங்கரர் நிறுவிய ஆறு மதங்கள்
தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சக்தியை வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் கணாபத்தியம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.

அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

வாதங்கள்
கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மண்டன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மண்டன மிஸ்ரர், சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் எனும் ஊரில் சைவ சமயத்தவருடன் வாதிடுகின்றார் சங்கரர்.

நிர்வாணாஷ்டகம்

நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும். இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம்ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்