திருநாகேசுவரம்
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்பு
இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம், நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
தொன்மை
ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.-----------------------------------------------------------------------------------------------------------தல வரலாறு
இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.
நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர் பெற்றது.
சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.
ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.
சிறப்புகள்
சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.
இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது.
தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார்.
இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள்.
காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.
சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன.
கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.
Comments
Post a Comment