காலம் தேர்[ CALENDAR ]


காலம் தேர்[ CALENDAR ]----தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை, சித்திரை என்று இருவேறு பிரிவினர்களால் வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உண்மையாக இருக்கும்?

தமிழர்கள் இந்தத் தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கின்றனர்? இந்தியா தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜூ தீவுகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் நாம் பன்னெடுங்காலமாக சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும் கதிரவனை (ஞாயிறு) அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தின் அளவை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நம் முன்னேர்கள் முன்பே தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தமிழில் “தெறிப்பளவு” என்பார்கள். ஆங்கிலத்தில் “Time Measure ” என்பார்கள். அதாவது,

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாடி – நாழிகை
2½ நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
360 ஆண்டு = 1 தேவ ஆண்டு
12 ஆயிரம் தேவ ஆண்டு = 1 சதுர்யுகம்

இந்த சதுர்யுகத்தில் பார்த்தம், பரமம் போன்றவைகளைக் கடந்து யுகம் இருக்கிறது. இந்த யுகங்களில் கிருதயுகம், திரேதாயுகம் மற்றும் துவாபரயுகம் போன்றவை முடிந்து போய் விட்டன. தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல லட்சம் ஆண்டுகளுக்குக்கும் மேலான காலக் கணக்குகளை நம் முன்னோர்கள் சிறப்பாக வகுத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

இக்காலச் சுழற்சியில் தமிழர்கள் நாள் மற்றும் ஆண்டைப் பொழுதுகளாகப் பிரித்துள்ளனர்.

"பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே"

என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது

ஒவ்வொரு நாளையும் நான்கு மணிகளாகக் கொண்டு பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

2 முதல் 6 மணி வரை – இராப்பொழுதின் பிற்கூறு - வைகறை
6 முதல் 10 மணி வரை – பகற்பொழுதின் முற்கூறு – விடியல் (காலை)
10 முதல் 2 மணி வரை – பகற்பொழுதின் நடுக்கூறு - நண்பகல்
2 முதல் 6 மணி வரை – பகற்பொழுதின் பிற்கூறு - ஏற்பாடு
6 முதல் 10 மணி வரை – இராப்பொழுதின் முற்கூறு - மாலை
10 முதல் 2 மணி வரை – இராப்பொழுதின் நடுக்கூறு - யாமம்

இந்த ஆறு பொழுதுகளும் சேர்ந்தது சிறு பொழுது என்கிறார்கள்.

இதுபோல் ஒவ்வொரு ஆண்டையும் இரு மாதங்களாகப் பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

சித்திரை & வைகாசி மாதங்கள் – இளவேனில் காலம்
ஆனி & ஆடி மாதங்கள் – முதுவேனில் காலம்
ஆவணி & புரட்டாசி மாதங்கள் – கார் காலம்
ஐப்பசி & கார்த்திகை மாதங்கள் – கூதிர்க் காலம்
மார்கழி & தை மாதங்கள் – முன்பனிக் காலம்
மாசி & பங்குனி மாதங்கள் – பின்பனிக் காலம்

என்று இந்த ஆறு காலங்களும் சேர்ந்து பெரும் பொழுது என்கிறார்கள்.

இந்தப் பெரும் பொழுதின் தொடக்கம் இளவேனில் காலம்தான். இந்தக் காலத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். இம்மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக இருப்பதுதான் சரி.

தை மாதம் ஆண்டிற்கான பெரும் பொழுதுகளில் முன்பனிக் காலத்தில் வருகிறது. இந்த முன்பனிக் காலமே ஆண்டின் முதல் தொடக்கமாக வைத்துக் கொண்டாலும் மார்கழி மாதம் ஆண்டின் தொடக்கமாக இருக்குமே தவிர, அதில் இரண்டாவதாக உள்ள தை மாதம் எப்படி ஆண்டின் தொடக்கமாகும்?

தமிழ் மாதங்கள் கதிரவனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகக் கதிரவனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும். கதிரவன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) எனும் அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் கதிரவன் 12 இராசிகள் வழியாகப் பயணம் செய்கிறது. அந்தப் 12 இராசிகளை;

1. மேடம் (‍ேமஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

என்று குறிப்பிடுகின்றனர்.

கதிரவன் இந்த பன்னிரண்டு இராசிக்குள் நுழைந்து அதை விட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.

கதிரவன் மேட இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரை. இவ்வாறே அடுத்துள்ள ஒவ்வொரு இராசியிலும் கதிரவன் பயணிக்கும் காலத்தை மாதங்களாகக் கொண்டு மொத்தம் 12 மாதங்கள் என கணக்கிட்டுள்ளனர்.

அவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இம்மாதங்களை நல்ல தமிழில் சொன்னால்,

1. மேழம்
2. விடை
3. ஆடவை
4. கடகம்
5. மடங்கல்
6. கன்னி
7. துலை
8. நளி
9. சிலை
10. சுறவம்
11. கும்பம்
12. மீனம்

என்று சொல்லலாம்.

இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர் (காலம் + தேர்) என்று சொல்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் Calendar என்கின்றனர்.

தமிழ்க் காலந்தேரில் இருக்கும் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்திற்கென்று சில சிறப்புகள் உண்டு. சித்திரை மாதம் ஆண்டுக்கான பெரும் பொழுதில் இளவேனில் காலத்தில் இருக்கிறது. இந்தக் காலத்தை வசந்த காலம் என்றும் சொல்வார்கள். இந்த வசந்த காலத்தில்தான் இந்து சமயக் கோயில்கள் பல விழாக்கோலம் காண்கின்றன.

1. சித்திரை மாதத்தின் முதல்நாளில் நான்முகன் (பிரம்மா) இப்புவியைத் தோற்றுவித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

2. சித்திரை மாதத்தின் சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் சித்திரம் ஒன்று வரைய அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றியதாக புராணக்கதைகள் சொல்கின்றன.

3. சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மச்ச அவதாரம் (மீன் உருவம்) எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.

4. சித்திரை மாதம் சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.

5. ஸ்ரீ ராமன் சித்திரை மாதத்தில்தான் அவதரித்தார். இருப்பினும் இந்தியாவில் பங்குனி மாத வளர்பிறையில் நவமி திதியிலேயே ராம நவமி கொண்டாடப்படுகிறது.

இறைவன் அவதாரக் காலமே (பிறப்புக் காலமே) சித்திரையில் பிறக்கும் போது சித்திரை தமிழ்ப் புத்தாண்டாய்ப் பிறப்பதில் என்ன தவறு இருக்கிறது?

சித்திரை 1 ஆம் தேதியில்தான் இந்து சமயக் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறும்.

இதே சித்திரை 1 ஆம் தேதியன்று தமிழ் முனிவர் அகத்தியருக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் – உமாமகேசுவரி திருமணக் காட்சியைக் காட்டி அருளினர். இவ்விழா ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசுத் திருவிழாவின் போது நடைபெற்று வருகிறது. வேறு சில சிவத்தலங்களிலும் இவ்விழா நடத்தப் பெறுகிறது.

சித்திரை மாதத்திற்கென்று மேலும் பல சிறப்புகளும் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாம் பிறை தோன்றும் நாள் அக்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்நாளில் வாங்கும் பொருள்கள் பன்மடங்காகப் பெருகும் என்கிற நம்பிக்கை நம் தமிழ்நாட்டு மக்களிடம் இன்றும் இருக்கிறது.

இந்த வசந்தக் காலத்தில்தான் இந்துக் கோயில்களில் பிரமோற்சவம் எனும் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று

1. மதுரை மாநகரில் சொக்கநாதர் – மீனாட்சி திருமண நிகழ்வுகள் சித்திரை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

2. மதுரை மாநகரில் இதே நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

3. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பு என என்கின்றனர்.

4. விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் விழா கொண்டாடுகின்றனர்.

5. தேனி மாவட்டத்திலுள்ள மக்கள் கூடலூர் அருகிலுள்ள மலைப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஒருநாள் மட்டும் சிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

இதுபோல், சித்திரை மாதம் கோடைகாலமாக இருப்பதால் கோடைகாலத் தெய்வமாக வணங்கப்படும் மாரியம்மன் கோயில்கள் அனைத்தும் விழாக் கோலம் காண்கிறது. நாட்டுப்புறத் தெய்வங்கள் அல்லது சிறுதெய்வ வழிபாடு இக்காலத்தில்தான அதிகமாக நடத்தப் பெறுகின்றன.

தமிழகத்தின் தென்பகுதி மக்கள் சிறுதெய்வ வழிபாடு நிகழ்வுகளை கொடை விழா என்று அழைக்கின்றனர். இது முன்பு கோடை விழாவாக இருந்து பின்னர் கொடை விழாவாக மருவியிருக்க வேண்டும்.இன்றும் கொடை விழாக்கள் சித்திரை வைகாசி மாதங்களிலேயே நடத்தப் பெறுகின்றன.

இப்படி சித்திரை மாதத்திற்கு பெருமை சேர்க்கும் எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று மூதாதையர்களுக்குத் திதி எனும் புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகளும் கூட நடத்தப் பெறுகின்றன.

மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், மதுரை மாநகரில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மூன்று தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றன. மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு (தெருக்களுக்கு) ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள், அதையும் தாண்டி வெளியில் வந்தால் வெளி வீதிகள் என கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு திசைகளிலும் கோயிலைச் சுற்றி மதுரை மாநகரின் தெருக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் அப்படியே இருக்கின்றன.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்தந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும் என்பதுதான் இதன் சிறப்பு. இதில் சித்திரைத் திருவிழாதான் மிகச்சிறப்பு.

இத்தகவல்களெல்லாம் மூடநம்பிக்கை சார்ந்தவை என்று சிலர் குற்றம் சாட்டக் கூடும். இவை சிலருக்கு மூடநம்பிக்கையாகத் தோன்றினாலும் தமிழ்நாட்டிலிருக்கும் மக்களுக்கு மன ஆறுதலளிக்கும் தகவல்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் தகவல்கள்.

சித்திரை மாதம் கோடைகாலம்தான். வயல்கள், தோட்டங்களெல்லாம் உற்பத்தியைத் தொடங்காத காலம்தான். காய்ந்து கிடக்கும் நிலங்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள காலங்கள். இக்காலத்தில் மழை பெய்ய வேண்டி கோயில்களில் விழாக்கள் நடத்தி வழிபடுகின்றனர். அவர்கள் வேண்டுதலினாலோ அல்லது இயற்கையாகவோ சிறிதளவு பருவ மழை பெய்யத் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து ஆனி, ஆடி மாதங்களில் விவசாயப் பெருமக்கள் தங்கள் நிலங்களில் உற்பத்தியைத் தொடங்குகின்றனர். இவை தொடக்கக் காலங்கள்.

தை மாதம் முதல்நாள் தமிழர் திருநாளாக விவசாயப் பெருமக்கள் விழா கொண்டாடுகின்றனர். எப்படி? விவசாயத்திற்குத் தேவையான மழை, வெப்பம் போன்ற வசதிகளை வழங்கி அறுவடை செய்தவை வீடு வந்து சேர உதவியமைக்காக, கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நன்றித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். இவை முடிவுக் காலங்கள்.

இதிலேயே தொடக்கம் எது? முடிவு எது? என்பது தெரியவில்லையா?

சித்திரைதான் ஆண்டின் தொடக்கம். சிறப்பின் தொடக்கம் என்று நம் தமிழ் இலக்கியங்களும் நமக்குச் சொல்கின்றன. நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட தெலுங்கு வருடப் பிறப்பு மார்ச் இறுதியில்தான் வருகிறது. வட இந்தியாவிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்தான் வருடப் பிறப்பு தொடங்குகின்றன. இப்படி சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று காட்டும் பல எடுத்துக்காட்டுகளை நாம் காண முடிகிறது.

தமிழ்ப் புத்தாண்டு மாற்றத்தைக் கோருபவர்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியை எதிர்க்கும் நோக்குடன் தமிழுக்கென தனி புத்தாண்டு தேடுகிறார்களே தவிர, அவர்கள் தமிழுக்காக எதையும் தேடவில்லை. இந்து சமயக் காலக் கணிப்பு முறை வடமொழி எனும் சமஸ்கிருத மொழியில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கணிப்பிலான பன்னிரண்டு மாதங்களுக்கான பகுப்பும் வடமொழிப் பெயர்களாகவே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக மக்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இப்படி பிற மொழியின் ஆக்கங்களையும், கலைச் சொற்களையும் நாம் ஏற்றுக் கொள்வதால் தமிழ் மொழியின் வளர்ச்சி அதிகரிக்கவே செய்யும். இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கில மொழி, பல பிற மொழிச் சொற்களை உள் வாங்கிக் கொண்டு வளர்ந்திருக்கிறது. ஆங்கில மொழியில் எத்தனையோ பிற மொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. அவையெல்லாம் இன்று ஆங்கிலச் சொற்களாகவே ஆகிப் போய் விட்டன.

ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ஜேம்ஸ் முரே அகராதியைத் (Dictionary) தொகுத்துக் கொண்டு இருந்த போது டாக்டர் மைனர்ஸ் என்பவரிடமிருந்து பயனுள்ள ஆலோசனைகளும், புதிய சொற்களும், அதற்கான விளக்கங்களைப் பற்றியும் தொடர்ந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.

அவருக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பதற்காக டாக்டர் மைனர்ஸ் குறிப்பிட்டிருந்த முகவரிக்குச் சென்ற பேராசிரியர் ஜேம்ஸ் முரேக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் அவர் சென்ற இடம் ஒரு பைத்தியக்காரர்கள் இல்லம். அவர் அங்கிருந்த அலுவலரைக் கண்டு பேசினார்.

டாக்டர் மைனர்ஸ் புத்தி பிசகி ஒருவரைக் கொன்று விட்டதாகவும், அதற்காக அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த பைத்தியக்கார இல்லத்தின் அலுவலர் தெரிவித்தார்.

அந்த இல்லத்தில் ஏதாவது படித்துக் கொண்டிருந்த டாக்டர் மைனர்ஸ் தமக்குத் தோன்றிய சொற்களை ஜேம்ஸ் முரேக்கு எழுதியனுப்பியதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் டாக்டர் மைனர்ஸ் கண்டுபிடித்து அனுப்பிய ஆயிரத்துக்கும் அதிகமான சொற்கள் ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பெற்று விட்டன. இன்றும் அச்சொற்கள் ஆங்கிலப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

சிலர் ஆங்கிலப் புத்தாண்டு 2012 என்று அடையாளப்படுத்த முடிகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு அடையாளம் வேண்டுமே என்கிறார்கள்...

உண்மையைச் சொல்லப் போனால் ஆங்கிலப் புத்தாண்டும் முன்பு ஏப்ரல் 1 ஆம் தேதியில்தான் தொடங்கியது.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள் என்று புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப் போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1562ம் ஆண்டில் பதின்மூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரகோரி ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு “கிரகோரியன் நாள்காட்டி” உருவாக்கப்பட்டு புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்த போது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

இப்படி ஏப்ரல் 1 ஆம் நாள் புத்தாண்டு மறைக்கப்பட்டதற்கும் அந்நாள் முட்டாள் நாளாக்கப்பட்டதற்கும் சமயம் சார்ந்த தகவல்களே முன்னிலையாக இருக்கின்றன.

உலகம் முழுக்க மார்ச், ஏப்ரல் மாதங்களே புத்தாண்டு தொடக்கங்களாக இருந்திருக்கின்றன...

உலகின் மூத்த குடிமக்கள் என்கிற பெருமையுடன் இருக்கும் நாம் குறிப்பிட்ட எல்லைக்குள் தமிழர் ஆண்டு என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக காலங்காலமாகத் தொடர்ந்து வரும் சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்வோம். தொடர்ந்து சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடுவோம்... நம் நம்பிக்கையைத் தொடர்வோம்... வாருங்கள்!------
நன்றி-----முத்துக்கமலம்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்