நார்த்தாமலை

நார்த்தாமலை இன்று உள்ளதுபோல் மொட்டைப் பாறைப் பிரதேசமாக இல்லாமல், பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைமையகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக, 'நானாதேசத்து ஐநூற்றுவர்' என்கிற வணிகர் குழுவிற்குத் தலைமைச் செயலகமாக இருந்திருக்கிறது.

ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ), பல்லவ இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில், விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்திய பிறகு நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது. அதன்பிறகு சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நார்த்தாமலை சிறப்புப் பெற்று விளங்கியதற்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) மற்றும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்துக் கற்றளிகளே சான்றுகள்.

முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் பொழுது (கி.பி 985-1014), ‘தெலுங்குக் குல காலபுரம்’ என்று அம்மன்னனின் பட்டபெயர்களில் ஒன்றால் நார்த்தாமலை அழைக்கப்பட்டிருக்கிறது. நார்த்தாமலை சோழர்களின் கடைசி அரசனான மூன்றாம் இராஜேந்திரன் காலம் வரை சோழர்களின் ஆட்சியின் கீழும், அதன்பிறகு பாண்டியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.

பாண்டியர்களுக்கு பிறகு நார்த்தாமலை மதுரையை ஆண்ட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மதுரை சுல்தான்கள் ஆட்சியின் கீழ் ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் இருந்திருக்கிறது. கி.பி 14 ம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராயன் தலைமையிலான விஜயநகரப் பேரரசின் தென்னக ஆக்கிரமிப்புக்குப் பிறகு நேரடியாக மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.

அக்காலத்தில் ‘அக்கல் ராஜா’ என்ற விஜயநகரத்தைச் சேர்ந்த பெரிய மனிதர் ஒருவர் இராமேஸ்வரம் செல்லும்பொழுது நார்த்தாமலை பகுதியில் இருந்த ‘விசெங்கி நாட்டுக் கள்ளர்’களின் அட்டகாசத்தை ஒழித்துக் கட்டி நார்த்தாமலை கோட்டையில் தங்கியிருந்துள்ளார். அப்பகுதியில் இருந்த பல்லவராயர் குலத்தைச் சேர்ந்த இளவரசியான 'அக்கச்சி' என்பவர் கச்சிரன் குலத்தைச் சேர்ந்த கள்ள வீரரிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார். அக்கல் ராஜா கொல்லப்பட்ட பிறகு, அவரது ஏழு மனைவியரும் நார்த்தாமலைப் பகுதியின் ஓரிடமான 'நொச்சிக் கண்மாயில்' தீக்குளித்து இறந்து போனார்கள். இவர்களுடைய சந்ததியினர் இன்றுவரை ‘உப்பிலிக்குடி’ என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ‘உப்பிலிக்குடி ராஜா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

அதன்பிறகு புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் நார்த்தாமலையைப் பல்லவராயர்களிடமிருந்து கைப்பற்றி அதனை இயற்கை அரண்களுடன் கூடிய இராணுவ நிலையமாகப் பயன்படுத்தியுள்ளனர். மன்னர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் வரை நார்த்தாமலை புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்