பழையாறை

பழையாறை-----தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது? பச்சை மரகதங்களும், சிவந்த ரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புது நீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன. அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்தி முற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆக...