சோழர் காலத்தில் ராமர்
ராமனும் சோழர் குலத்தில்
உதித்தவன் என்பதினாலோ என்னவோ
சோழர் காலத்தில் ராமர் சிறப்பாக போற்றப்பட்டார்
-------------------------------------------------------------------------------------
ராமர்-சீதை வழிபாடு
தென்னகத்தை விட
வட இந்தியாவில் தான் அதிகமென்று சிலர் கூறுவர்.
.
உண்மையில் சோழர் காலத்தில்
ராமர் மிகச் சிறப்பாகவே
தமிழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளார்.
.
பிற்கால சோழர்களில்
விஜயாலய சோழரின் மகனும்,
பிற்கால சோழப் பேரரசை நிறுவியவருமான
ஆதித்த சோழருக்கு
கோதண்ட ராமர் எனும் சிறப்புப் பெயர் உண்டு.
.
போர்க்களத்தில் வில் வித்தையில் சிறந்து விளங்கியதால்
இப்பெயர் பெற்றார் என்றுக் கூறுவர்
.
பொக்கிஷம்பாளயத்தில் உள்ள
அவரது பள்ளிப்படை
கோதண்டராமேஸ்வரம்
என்றே அழைக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது.
.
ஆதித்த சோழரின் மகனான
பராந்தக சோழன் காலத்தில்
ராமாயணம் அழியாத ஆவணங்களாக
கற்றளிகளில் ஆவணப்படுத்தப்பட்டன.
.
பராந்தகர் காலக் குறுஞ்சிற்பங்கள் புகழ் பெற்றவை.
திருப்புள்ளமங்கை,
திருச்சென்னம்பூண்டி
போன்ற சிவாலயங்களிலும்
.
ராமாயணத்தின் நிகழ்வுகளை
கையளவு குறுஞ்சிற்பங்களாக வடித்து
பொது மக்களும் காணும்படி செய்தார்
பராந்தக சோழர்.
.
வாலி வதம்,
வாலியின் மரண படுக்கை,
வாலி-சுக்ரீவன் யுத்தம்,
ராமர் பட்டாபிஷேகம்,
ராமர்-சீதை திருமணம், என
ராமாயணத்தின் பல்வேறு காட்சிகள்
எழிலுற பல்வேறு கோவில்களில்
செதுக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
.
சிவாலயங்களிலேயே இப்படி என்றால்
வைணவ ஆலயங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
.
பராந்தகரின் சிறப்புப் பெயரால்
மதுராந்தகம் என்றே அழைக்கப்படும்
இவ்வூரிலுள்ள
கோதண்ட ராமர் கோவில்
ராமர்-சீதைக்கான
தனி ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
.
இங்குள்ள சோழர் காலத்துக் கல்வெட்டுகள்
திருவையோத்திப் பெருமாள் (அயோத்தி) என்று
ராமரைக் குறிப்பதோடு
பிற்கால சோழர்கள் பலரும்
எண்ணற்ற நிவந்தங்களை
இக்கோவிலுக்கு வழங்கியுள்ளனர்.
.
இதே போல் செப்புப் படிமங்களாகவும்
ராமர், சீதை, அனுமன் சிலைகள்
எண்ணற்றக் கோவில்களுக்குத் தரப்பட்டுள்ளன.
.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள
நரசிங்கபுரம்
லெக்ஷ்மி நாராயணர் கோவிலுக்கு
முதலாம் குலோத்துங்கன்
ராமர்-சீதை சிலைகளை
செப்புப் படிமங்களாக எடுப்பித்தது
கல்வெட்டாதாரங்கள் மூலம் நாம் அறியலாம்.
.
கம்பர் காலத்திற்கு
பல ஆண்டுகள் முன்னிருந்தே
ராமாயணம்
தமிழகத்தில் பிரபலமாயிருந்ததையும்
நாம் காணலாம்.
.
பின்னர் 13ஆம் நூற்றாண்டில்
கம்பர் ராமயணத்தை எளிய நடையில் எழுதிய பின்
இன்னும் தமிழகத்தில்
பட்டித் தொட்டியெங்கும் ராமர் புகழ் பரவியது.
.
ராமாயணப் பகுதிகள் கூத்தாகவும்,
இசை நாடகமாவும்
பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.
.
ராமாயணமும் மகாபாரதமும்
கோவிலில் படிப்பதற்கு
ஆட்களை அரசர்கள் நியமித்திருந்தனர்.
.
சோழர் காலத்தில்
இவ்வாறு சிறப்புற்றிருந்த ராமர் வழிபாடு
சில காலம் மங்கியிருந்துள்ளது.
.
சில காலத்திற்குப் பின்
ஆட்சிக்கு வந்த வைணவத்தை பின்பற்றும்
விஜய நகர மன்னர்கள் காலத்திலும்,
பின்னர் நாயக்கர் ஆட்சிக் காலத்திலும்
பல வைணவ ஆலயங்கள் கட்டப்பட்டன.
.
அவற்றிலெல்லாம் ராமாயணக் காட்சிகள்
தவறாமல் இடம் பெற்று
மக்களின் வாழ்வியலில்,
இறை வழிபாட்டில் இரண்டறக் கலந்தன.
.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்
எந்த அரசரும்
ராமரை பின்பற்றி ஒரு தாரத்துடன் நிறுத்தவில்லை.
பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும்
ஆட்சியை நிலையாகக் கொள்ளவும்
பல மனைவிகள் திருமணம் செய்தல் அவசியமாயிருந்தது.
ஆனால்
சமூகத்தில் சட்டமாவதற்கு முன்னமே
பெரும் மாற்றமாக
ஒரு தார மணம் என்பது ராமரை முன்னிறுத்தி
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய
வாழ்க்கை முறையாக மாறிப் போனது...!
Udhaya Shankar
Comments
Post a Comment