மதுரை அழகர் கோயில்

அழகர்கோயிலும் கள்ளர்களும் :- மதுரை அழகர் கோயில் மிகவும் பழமையான வைணவத்தலங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியமான பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தில் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஆழ்வார்களில் 5 ஆழ்வார்கள் 108 பாசுரங்களில் இக்கோயில் பற்றி பாடியுள்ளனர். பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். பழமையான அழகர் கோயிலுக்கும் கள்ளர் பழங்குடியினருக்கும் உள்ள நெடிய பிணைப்புகளை காண்போம். கள்ளழகர் ********** அழகர் கோயில் பிற்காலத்தில் கள்ளழகர் கோயில் என மக்களால் அழைக்கப்பட்டது. திருமாலிருஞ் சோலைமலை அழகர்மாலை எனும் ஒலைச்சுவடித் தொகுப்பில் " கள்ளர் குலத்தார் திருப்பணி வேண்டிய கள்ளழகா" , " கள்ளர்குரிய அழகுப்பிரான்" என பல இடங்களில் அழகர் கள்ளர்களுக்கு உரியவர் எனும் விதத்தில் பாடப்பட்டுள்ளது. கிபி 1751ல், பிரெஞ்சு அரசாங்கத்தின் சார்பாக கள்ளர்களின் ஆதரவை கேட்டு தன்னரசு கள்ளர் நாடுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட கள்ளர் நாடுகளில் அழகர் கோயில் கள்ளர் என மேலநாட்டு கள்ளர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அழகர்கோயிலை மையமாக கொண்டு கள்ளர்கள் தன்னரசு ஆட்சி நடத்தியதை இந்த கடிதம் நிரூபிக்கிறது. ( Diary of ananda ranga pillai Vol 8). அழகரைஅழகரை கள்ளர்களின் மிக முக்கிய தெய்வமாகவே வரலாற்று சான்றுகள் எடுத்துரைக்கின்றன. கள்ளர் திருக்கோலம் ********************** சித்திரைத் திருவிழாவின் போது அழகர் மதுரை நோக்கி, கள்ளர் திருக்கோலத்தில் வரும் நிகழ்வு மிகவும் பிரசத்தி பெற்றது. ஒரு கையில் வளைத்தடி மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, கள்ளர்களைப்போல கொண்டை, தலையில் உருமா , காதுகளின் அடிப்புறத்தில் கல்வைத்துக்கட்டிய வளையம் போன்ற கடுக்கண், இவற்றோடு காங்கு எனும் கருப்பு நிற உடையுமாக கள்ளர் குல வீரனை போலவே காட்சி தருவார். கள்ளர் திருக்கோலத்தில் வரும்போது அழகர் கையில் இருக்கும் வளரிக்கும், மேலநாட்டு கள்ளருக்கும் உள்ள தொடர்பு நெடிய தொடர்புள்ளது. மேல நாடு எனும் நாட்டமைப்பு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு, பாளையப்பட்டு , பத்துக்கட்டு, பறப்புநாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. " வளரியை அனுப்பி பெண்ணை எடு" எனும் வழக்கம் மேலநாட்டு கள்ளர்களிடம் இருந்ததாக " எட்கர் தர்ஸ்டன்" கிபி 1908ல் எழுதப்பட்ட தனது நூலான Caste and tribes of southern india வில் கூறுகிறார். கீழ்திசை சுவடிகள் நூலகத்திலுள்ள " கள்ளர் ஜாதி விளக்கம் " எனும் நூல் மேல நாட்டு கள்ளருடைய சங்கதி எனும் தலைப்பில் பின்வரும் செய்தியை தருகிறது:- " அப்பால் மாப்பிள்ளையுடைய உடன் பிறந்தவள், பெண் வீட்டுக்குப் போய், பரிசங் கொடுத்து, ஒரு சீலையுங் கொடுத்து, குதிரைமயிர் காணணி பெண்ணுக்குத் தாலியுங் கட்டி, வளைதடி மாற்றிக்கொண்டு, பெண்ணையுங் கூட்டிக் கொண்டு உறவுமுறையாருடன் வருகிறது" மேல நாட்டுக் கள்ளர்கள் திருமணத்தின் போது வளரியை பரிமாற்றம் செய்து கொள்வது சடங்காகவே நடந்துள்ளதை உறுதிப்பட அறியலாம். அழகருக்கு இடப்படும் கொண்டை மேலநாட்டு கள்ளரின் கொண்டையை போல ஒத்து வருகிறது. Madurai gazetter. எழுதிய நெல்சன் கள்ளச்சாதியில் 15 வயதான ஆண்மகன், தான் விரும்பிய அளவு முடி வளர்த்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் என குறிப்பிட்டுள்ளார். அழகர் அணியும் கடுக்கண் மேலநாட்டுக் கள்ளர் அணியும் வகையில் அமைந்துள்ளது. இதன் பெயர் வண்டிக்கடுக்கண் ஆகும். கள்ளர் வழிமறிப்பு சடங்கு *************************** " அழகர் வர்ணிப்பு " எனும் ஒலைச்சுவடியில் , சித்திரைத் திருவிழாவின் போது, அழகர் மதுரை வரும்போது, தல்லாக்குளம் தாண்டி, கள்ளந்திரி எனும் பகுதியில் கள்ளர்கள் அழகரை மறித்ததாக கூறப்பட்டுள்ளது. " கள்ளர் வழிமறித்து காயாம்பு மேனியை கலகமிகச் செய்தார்கள் வள்ளலார ப்போது- நீலமேகம் கள்ளர்களைத் தான் ஜெயிக்க" எனும் பாடல் வரிகள் கள்ளர்கள் அழகரை மறித்த செய்தி குறித்து கூறுகிறது. அழகர் வர்ணிப்பு கூறும் இந்த நிகழ்ச்சி இன்றளவும் சித்திரை திருவிழாவின் போது சடங்காக நடந்து வருகிறது.சித்திரை திருவிழாவின் முடிவில் அழகர், தனது கோயிலை நோக்கி திரும்பி வரும்போது, தல்லாக்குளம் அருகில், கள்ளர்கள் பெருஞ்சத்தத்தோடு, பல்லக்கை நோக்கி வந்து, பல்லக்கின் கொம்புகளை " வாழக்கலை" எனும் ஈட்டி போன்ற கருவியால் குத்தி, மூன்று தடவை பல்லக்கை சுற்றி வருகின்றனர். அழகரை வழிமறிக்கும் உரிமை மேலநாட்டை சேர்ந்த மாங்குளம் கிராமத்து கள்ளர்களுக்கே உண்டு. கள்ளர்களின் பிற உரிமைகள் ******************************************* சித்திரைத் திருவிழாவில் மாங்குளம் கிராமத்தாருக்கு தோசை உரிமை உண்டு. நாட்டுக்கள்ளரில் மாங்குளம் கள்ளர்களுக்கு மட்டும் இரணியன் வாசல் அருகில் ஒரு பழைய மண்டபம் உரிமையாய் உள்ளது. சித்திரை திருவிழாவின் போது அழகரின் ஆடை மற்றும் அணிகலன் பெட்டியை மதுரைக்கு கொண்டு வரும் உரிமை மாங்குளம் கிராமத்தாருக்கே உரியது. மதுரை செல்லும் வழியில் அழகர் இறங்கும் மண்டபங்கள் தோறும் நான்கனா வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்தாருக்கே உண்டு. ஆடி மாதத்தில் நடைபெறும் அழகர்கோயில் தேரோட்டத்தில் வடம் இழுக்கும் உரிமை நாட்டுக்கள்ளர்களுக்கு உண்டு. முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீன் கிராமங்களும், மற்ற மூன்று வடங்கள் இழுக்கும் உரிமை முறையே தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு கள்ளர்களுக்குரியதாகும். தேர் இழுக்கும் முன் , வடம் இழுக்கும் உரிமை பெற்ற கள்ளர்கள், தேருக்கு முன் நாட்டுக்கூட்டம் நடத்துகின்றனர். அங்கு தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை விவாதிக்கப்படுகிறது. ஜமீன்தாருக்கும், ஏனைய மூன்று தெரு கள்ளர் தலைவர்களுக்கும் 8 முழம் அளவுள்ள " நாகமடிப்பட்டு" கோயில் மரியாதையாக தரப்படுகிறது. கள்ளர்கள் இழுக்கும் ஒவ்வொரு வடத்திற்கும், 2 தோசை மற்றும் 2 படி அரிசிப்பொங்கல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. சித்திரை திருவிழாவின் போது கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர் முதலில் நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர் மண்டபத்தில் தங்கி அருள் தருகிறார். அம்பலக்காரர் மண்டபத்தில் கள்ளர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் வேடுபறி நிகழ்வு **************************************** பன்னிரு ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் கள்ளர் மரபினன் என திவ்ய சூரி சரிதம் எனும் நூல் உரைக்கிறது. திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி நிகழ்வு அழகர் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை நடத்தும் பொறுப்பு வெள்ளியங்குன்றம் பாளையக்காரருடையதாகும். இந்த நிகழ்வின்போது கள்ளர் வேடம் பூண்டு கோயில் மரியாதைகளை மாங்குளம் கள்ளர்களே பெறுகின்றனர். மாங்குளம் கள்ளரில் பொன்னம்பல புலியன், ஆனைவெட்டி தேவன், ஒஞ்சியர், வப்பியர் ஆகிய பிரிவினரும், வடக்குத் தெரு கள்ளரில் அஞ்சாங்கரை அம்பலம் ஆகிய ஐந்து பிரிவினரும் தங்களுக்குள் திருமங்கை ஆழ்வார் வேடுபறி நிகழ்வில் பங்குகொள்வதற்கான பட்டு பரிவட்ட மரியாதையை மாறி மாறி பெற்றுக்கொள்கின்றனர். அழகருக்கும் கள்ளர்களுக்குமான தொடர்பு மிகவும் பிரசத்தி பெற்று விளங்குகிறது. அழகர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் கள்ளர் இன மக்கள், தங்களது வீரத்தாலும், தலைமைப்பண்பாலும் அழகர்கோயிலில் பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகின்றனர். சி. சு. சம்பட்டியார் ஆதார நூல்கள் :- Caste and tribes of southern india, vol 3 அழகர்கோயில், மதுரை பல்கலைக்கழக வெளியீடு

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்