போர்க்குடிகள்

பிரிட்டீசார் பார்வையில் முக்குலத்தோர்:  100 தகவல்கள்.....
கிபி 1891 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Census of india- Madras எனும் நூலில் போர்க்குடிகள்

வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ் சாதிகள் முக்குலத்தோர் மட்டுமே.  கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார்கள் போர்க்குடிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
முக்குலத்தோரான கள்ளர்,  மறவர் மற்றும் அகமுடையாரின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கிபி 1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Caste and tribe's of southern india எனும் தெளிவாக தரப்பட்டுள்ளது. பிரிட்டீசார் தாங்கள் நேரில் கண்டவற்றை தங்களது புரிதலுக்கு ஏற்ப பதிவு செய்துள்ளனர். இந்நூலில் உள்ள சில அரிய தகவல்களை காண்போம்.. 1906 ஆம் ஆண்டை நோக்கி செல்வோம்....
👉01) தஞ்சாவூர்,  திருச்சிராப்பள்ளி,  மதுரை ஆகிய மாவட்டங்களிலும் புதுக்கோட்டைப் பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படும் நடுத்தர உடல்வாகும்,  கறுத்த நிறமும் கொண்ட பழங்குடி மக்கள் கள்ளர்கள். 
👉02) பல்லவர் நாடான தொண்டை மண்டலமே கள்ளர்கள் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த நாடாகும். இந்த வகுப்பின் தலைவரான புதுக்கோட்டை மன்னர் இன்றும் தொண்டைமான் என அழைக்கப்படுகிறார்.
👉03) 1891 கணக்கெடுப்பு அறிக்கையில் அகமுடையார், கள்ளர் என்பன மறவர்களின் உட்பிரிவாக குறிப்பிடத்தக்க வகையில் பெரும்பான்மையானோரால் பதியப்பட்டுள்ளது. 
👉04) மறவர் என்பதும் கள்ளர்களின் உட்பிரிவில் ஓன்றாகக் காணப்படுவதால் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் ஆகிய மூவரிடையேயும் நெருங்கிய உறவு உள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த மூன்று சாதியாரும் தங்களை தேவன் வழிவந்தவர் என கூறிக்கொண்டு தேவர் எனும் பட்டத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.
👉05) மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகள் சில நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாடு என்ற இப்பெயர் கள்ளர்கள் வாழும் பகுதிகளுக்கு உரியவனவாகும்.
👉06) மதுரையை சுற்றியுள்ள கள்ளர்கள் தாங்கள் வாழும் பகுதிகளை மேலநாடு , வெள்ளளூர் நாடு ,
சிறுகுடிநாடு , மல்லாக்கோட்டை நாடு, பாகனேரி நாடு, கண்டர்மாணிக்கம் நாடு, கண்டதேவி நாடு, புறமலை நாடு, தென்னிலை நாடு,  பாளைய நாடு போன்ற பல நாட்டமைப்புகளாக கொண்டுள்ளனர். 
👉 07)சகோதரியின் மகளை திருமணம் செய்யும் வழக்கம் கிளையுள்ள கள்ளர்களிலும் மறவர்களிலும் முற்றிலும் தடைசெய்யப் பட்டுள்ளது.
👉08) கள்ளர்கள் தென் மாவட்டங்களில் நாட்டுப்புற பகுதிகள் பலவற்றில் பரம்பரையாக தங்கி வாழ்ந்ததோடு அவற்றின் பல பகுதிகளை தங்களது ஆளுமையிலும் கொண்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய பகுதிகளில் தங்களுக்கென ஒரு தலைவனையும் பெற்று இருந்தனர். இத்தலைவனின் ஆணைப்படி நடக்கும் கட்டுப்பாடையும் இவர்கள் பெற்று இருந்தனர்.
👉 09)காவிரிப் படுகையில் வளமான பயிர்த்தொழில் நடைபெறுவதான திருவாடி வட்டத்தின் ரயத்துவாரி நிலங்களின் பெரும்பகுதிக்கு உடைமையாளர்களாக விளங்குபவர்கள் கள்ளர்களே.
👉 10)காவேரியின் கரை சார்ந்த ஊர்களில் வாழும் கள்ளர்கள்   செல்வ வளம் படைத்த உயர் குடியினராகவே உள்ளனர்.
👉11) தஞ்சாவூர் கள்ளர்களில் ஒரு பிரிவினர் தங்கள் வகுப்புகளுக்குப் பல்லவ ராசா, தஞ்சாவூர் ராசா, தெற்கை வென்றவன், வல்லமை உடைய மன்னன் என்பன போன்ற பலவகை உயர்பட்டப் பெயர்களை உடையவர்களாக உள்ளனர்.
👉12) மறவர்கள் பொதுவாக சூட்டிக் கொள்ளும் பட்டப்பெயர் தேவன் என்பதாகும். சிலர் தலைவன், சேர்வைக்காரன், கரையான், ராயர் வம்சம் போன்ற பட்டங்களையும் தரிக்கின்றனர்.
👉 13)மறவர்கள் திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் கன்னியாகுமரியில் இருந்து இராமநாதபுரம் சமீன் எல்லைவரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இராமநாதபுரம் ஜமீனும், சிவகங்கை ஜமீனும் மறவர் சாதியை சேர்ந்தவர்களே.
👉14) சொக்கம்பட்டி சமீனை சேர்ந்த இளைஞன் கிபி 1902 லேயே சென்னை பல்கலைக்கழகத்தில் பி ஏ பட்டத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த முதல் இந்து மறவர் ஆவார்.
👉15) கள்ளரைப் போலவே மறவர்களும் பிராமண நெறியின் தாக்கத்திற்கு உள்ளாதவர்களாக இருந்தனர்.
👉16) மறவர்கள் போர் ஆற்றலுக்கு பெயர்போன வீரமிக்க இனத்தவர்களாக இருந்துள்ளனர். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் அரசுரிமையைக் கூடப் பெற்றிருந்தவர்களாக இருந்துள்ளனர்.
👉17) பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மறவர்கள் ஆங்கிலேயருக்கு மிகுந்த தொல்லைகள் விளைத்துள்ளனர். இன்று மறவர்கள் அமைதியான வாழ்க்கையை கடைப்பிடித்தாலும் மற்றவர்களைவிட அஞ்சாமையும் சட்டத்தைப் புறக்கணிக்கும் பண்பும் உடையவர்களாக உள்ளனர்.
👉18) மறவர்களில் பலர் அகமுடையான், கள்ளர் என தங்கள் சாதியின் உட்பிரிவை குறிப்பிட்டு உள்ளனர்.மறவன் என்பது கள்ளர் சாதியின் உட்பிரிவாகவும் பதியப்பட்டுள்ளது. கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார் சாதிகள் தங்களுக்குள் மிக நெருங்கிய உறவினை கொண்டுள்ளனர்.
👉19) சேதுபதியின் பரம்பரையான இராமநாதபுரம் மறவர் குலத்தவர்கள் தங்களை மிக தொன்மையான பரம்பரையாக குறிப்பிட்டுள்ளனர்.
👉20)இராமநாதபுரத்தை சேர்ந்த செம்பிநாட்டு மறவர் மன்னர்கள் அகமுடையார்களை தங்களது மூத்த மகன் எனும் இடத்தில் வைத்துள்ளனர்.  மன்னர் இறந்தபின் அவரது மூத்த மகன் செய்ய வேண்டிய பல கடமைகளை அகமுடையார்களே செய்கின்றனர்.
👉21)பாளையக்காரர்களில் பெரும்பாலானோர் மறவர் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். சென்ற நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்களோடு திருநெல்வேலியின் உரிமைக்காக இந்த மறவர் பாளையக்காரர்கள் போராடி வந்தனர்.
👉22) அஞ்சாமையும், செயலாண்மையும், துணிவும், சூழ்ச்சியும் ஏறுமாறான போக்கும் கொண்ட மறவர்கள் அமைதியாக போர்த்தொழில் செய்த வேறு இனத்தவருக்கும் காவல் அரண்களாக இருந்துள்ளனர்.
👉23) 1891 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மறவர்களின் உட்பிரிவுகளாக அகமுடையான், கள்ளர், காரணன், கொண்டை கட்டி, கொட்டாணி, செம்மநாட்டான், வன்னிக்குட்டி முதலியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
👉24) அகமுடையார் எனும் சாதிக்கு உரியவர்கள் தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக காணப்படுகின்றனர்.
👉25) கள்ளன் மறவனாகி விட முடியும் என்ற தமிழ் பழமொழி வழக்கு ஒன்று உள்ளது. அவனே பின்னர் மரியாதைக்குரியவனாகி அகமுடையான் ஆகிறான். 
👉26) கணக்கெடுப்பின் போது அகமுடையார்கள் தங்களை கள்ளர் மறவர் சாதியின் உட்பிரிவாகவும் பதிந்து உள்ளனர்.
👉27) சிலவிடங்களில் அகமுடையார்கள் தங்களை செம்பிநாட்டு மறவர்களின் வழிவந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.
👉28) 1891 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அகமுடையார்களின் உட்பிரிவுகளாக ஐவழி நாட்டான்,  கோட்டைப்பற்று, மலைநாடு, நாட்டுமங்கலம், இராசபோசா, இராசகுலம், இராசவாசல், கள்ளன், துளுவன் முதலியன பதியப்பட்டுள்ளது. 
👉29) இராசவாசல் அகமுடையார்கள் அரசர்களின் முக்கிய அதிகாரியாகவும், அரசர்களோடு நெருங்கிய குடியுறவை உடையவர்களாகவும் இருந்துள்ளனர். கோட்டைப்பற்று அகமுடையார்கள் கோட்டையில் வாழ்ந்த அகமுடையார்களை குறிக்கும்.
👉30) மறவர்களுள் அரசர்களோ, மாவட்டத் தலைவர்களோ, சிறப்பான தகுதி பெற்றவர்களோ அகமுடையார் சாதியை சேர்ந்த பெண்களை மணக்கும் வழக்கம் கொண்டு இருந்தனர்.
👉31) மதுரை மாவட்ட அகமுடையார்கள் நாகரிகத்தில் முன்னேற்றம் அடைந்த தெற்கத்தி மறவர்களின் ஒரு பிரிவாகவே கருதப்படுகின்றனர்.
👉32) மறவர் இராசாக்கும் அகமுடையார் பெண்ணுக்கும் பிறக்கும் ஆண் குழந்தை அகமுடையார் சாதியை சேர்ந்தவராக கருதப்படுவார். இவர் அகமுடையாருக்குள் திருமணம் செய்ய வேண்டும்.
👉33) மறவர் இராசாக்கும் அகமுடையார் பெண்ணுக்கும் பிறக்கும் பெண் குழந்தை மறவர் சாதியில் சேர்க்கப்பட்டு அவர் மறவரில் திருமண உறவு கொள்வார்.
👉34) அகமுடையார்கள் வைணவத்தில் நாட்டம் கொண்டு இருந்தாலும் அய்யனார், பிடாரி, கருப்பசாமி போன்ற பல சிறு தெய்வங்களையும் வணங்குகின்றனர்.
👉35) புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளைச் சுற்றி வாழும் கள்ளர்களிடையே பட்டப்பேரு என வழங்கப்படும் புறமணக்கட்டுப்பாடு உடைய குலப்பெயர்கள் உள்ளன. அவர்கள் முத்து உடையான் , கறுப்ப தொண்டைமான் என்பது போலத் தங்கள் குலப்பெயரைப் பட்டப்பெயராகப் பயன்படுத்துகின்றனர். தஞ்சாவூர் மாவட்ட விவரக் குறிப்பில் கள்ளர்கள் ஒநாயன், சிங்கத்தான் என்பது போல பல சிறு பிரிவுகளாகப் குறிக்கப்பட்டுள்ளது.
👉36) கள்ளர்கள் பொதுவாக ஈட்டி எறிவதிலும், வளரி எனப்படும் வளைதடியினை எறிவதிலும் திறமை மிக்க அஞ்சா நெஞ்சர்கள். இந்த போர்க்கருவி இச்சாதியினரிடையே பெருமளவில் பயன்பட்டு வந்துள்ளது. சுமார் 30 அங்குலம் உள்ள வளைவுடையதான ஒரு கருவி இதுவாகும்.
👉37) கள்ளர்கள் வளரித் தடியினையும் , மேற்குக் கடற்கரைப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் வைத்திருப்பதைப் போன்ற கத்தியினையும் வைத்திருப்பர்.
👉38) கள்ளர்களும் மறவர்களும் பெருமளவில் வளரித் தடியினை பயன்படுத்துகின்றனர்.சென்னை அருங்காட்சியகத்தில்  மூன்று வளைதடிகள் உள்ளன. இவற்றுள் இரண்டு வளரிகள் யானை தந்தந்தால் செய்யப்பட்டது. 
👉39)  புதுக்கோட்டை அரசரின் படைக்கலங்களுள் மரத்தாலான வளைதடிகள் எப்போதும் இருப்பில் இருக்கும். 
👉40) பல்வேறு போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட வளரிகள் இன்று கள்ளர் மற்றும் மறவர் சாதியை சேர்ந்த போர்வீரர்களின் இல்லங்களில் செயலற்று உறங்குகிறது. சென்ற நூற்றாண்டில் கண்டோர் அஞ்சும்படி கள்ளர் மற்றும் மறவர்களால் பயன்படுத்தப்பட்ட வளரிகள் இன்று இவர்களின் பூசை அறையில் மற்ற போர்க் கருவிகளுடன் பழம்பெரும் சின்னமாக போற்றி பாதுகாக்கப் படுகிறது. ஆண்டு தோறும் ஆயுத பூஜை நாட்களில் வளரிகளை வெளியே எடுத்து சுரண்டி சுத்தப்படுத்தி மீண்டும் அதற்குரிய இடத்தில் சேர்த்து விடுகின்றனர்.
👉41) கள்ளர்களில் திருமணம் முடிந்தபின் மணமக்கள் மணமகன் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரு வீட்டாரும் தங்களுக்கிடையே வளரி தடியினை மாற்றிக் கொள்ளும் சடங்கு சிறப்புக்குரியதாக நடத்தப்படும். கள்ளர்களில்  " வளரிதடியினை அனுப்பி மருமகளை அழைத்து வா" என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.
👉42) சிவகங்கையில் இருந்து கைப்பற்றப்பட்ட மறவர்களின் படைக்கருவிகள் சில சேகரிப்பில் உள்ளன. இவை ஆஸ்திரேலிய பழங்குடிகள் பயன்படுத்தும் பூமராங்கை ஒத்த வளைதடியாகும்.
👉43) செல்வர்களான கள்ளர்கள் வெள்ளியாலான கம்பி இழைகள் சிலவற்றை முறுக்கி கழுத்தணியாக அணிகின்றனர்.இது தவிர குதிரை மயிர் மற்றும் பருத்தி நூல் முதலியவையும் கழுத்தணியாக பயன்படுத்தப்படுகிறது.
👉44) கள்ளர்களில் ஒரு பெண்ணினை திருமணம் செய்ய அவளது தாய்மாமனின் உடன்பாடு கட்டாயமாகும். தாய்மாமன் ஒப்புதல் இன்றி ஒரு பெண்ணை திருமணம் செய்ய இயலாது. 
👉45) திருமங்கலத்தில் உள்ள கள்ளர் பெண்களில் பலர் வியக்கத்தக்க வகையில் அளவில் பெரிய ஆறு, ஏழு அங்குலங்கள் நீளமுள்ள பதக்கங்களைக் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர்.
👉46) குழந்தை திருமணம் செய்வதை பிறமலைக் கள்ளர்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். 
👉47) திருநெல்வேலி மறவர் சமீன்தார்கள் மணமகனுக்கு பதிலாக மணமகன்  அனுப்பும் தடியினை மணப்பந்தலில் வைத்து சடங்குகளை நடத்தும் வழக்கம் இருந்தது.மணமகன் சார்பாக மணமகன் குடும்பத்தை சார்ந்த ஒருவர் தாலி கட்டி மணச் சடங்குகளை முடிப்பார்.
👉48) மறவர்கள் வாழும் ஊர்கள் பிற சாதியார் வாழும் ஊர்களை அடுத்தடுத்து உள்ளன. சிறுவர்களாகவும் சிறுமியர்களாகவும் இருக்கும் சமயத்தில் அனைத்து சாதியினரும் ஒன்றாக கலந்து பழகி, ஒட்டுறவும் பரிவுணர்வும் கொண்டவர்களாக உள்ளனர்.
👉49) கொண்டைகட்டி மறவர்களில் காணப்படும் கிளையான வீரமுடி தாங்கினான் மன்னரின் முடியை உடன் கொண்டு செல்பவர் எனும் பொருளை குறிக்கிறது. மற்றொரு கிளையான அழகிய பாண்டியன் கிளை மதுரையை ஆண்ட பண்டைய பாண்டியரில் ஒருவனாதல் வேண்டும். 
👉50) மறவர்களில் திருமணத்திற்கு முன் பெண்ணின் உடல்வாகு பொருத்தம் கண்டறியப்படுகிறது.  மணமகள் அகன்ற பாதங்கள் உடையவளாகவோ, கெண்டைக்கால் பருத்தவளாகவோ, கழுத்தின் தோலில் இரண்டு மடிப்புகளுக்கு மேல் இருப்பவளாகவோ இருக்க கூடாது.மணமகளின் நெற்றிப்பொட்டின் மயிர்க்கற்றை குறுக்குவாக்கில் வளர்ந்திருக்க வேண்டுவது மிக மிக இன்றியமையாதது. 
👉51) கள்ளர்கள் அனைவரும் சைவ சமயத்திற்கு உரியதான திருநீற்றினை முக்கியமான நாட்களில் அணிகின்றனர்.  எனினும் அவர்கள் பொதுவாக வைணவ சமயத்தை தழுவியவர்களாக உள்ளனர். 
👉52) கள்ளர்கள் பெயரளவில் மட்டுமே சைவர்கள். உண்மையில் அவர்கள் சிறு தேவதைகள் வழிபாட்டில் நம்பிக்கையுடைய சமயநெறி சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
👉53) சைவர்களுக்கு உரிய சின்னங்களை தரிக்கும் மறவர்கள் பல சிறு தெய்வங்களையும் வழிபடுகின்றனர். காளி, கருப்பன், முத்துக்கருப்பன், பெரிய கருப்பன், மதுரை வீரன், அய்யனார், முனுசாமி ஆகியன இவர்கள் வழிபடும் சிறு தெய்வங்களுள் அடங்கும்
👉54) கால்நடைகளை வசப்படுத்துவதில் கள்ளர்கள் கெட்டிக்காரர்கள். கள்ளர்கள் வாழும் பகுதிகளில் ஜல்லிக்கட்டு  மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்குகிறது.
👉55) கள்ளர் நாடுகளில் மாட்டுப் பொங்கல் நாளன்று காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்ட துணியினை அவிழ்த்துக் கொண்டு வந்து தங்களிடம் தரும் வீரமிக்க இளைஞரையே பெண்கள் தங்களது கணவராக தேர்ந்தெடுப்பர். 
👉56) கள்ள இளைஞன் ஒரு குறிப்பிட்ட காளையினைச் சுட்டிக் காட்டி தான் அதனை அடக்கி அதன் கொம்பில் உள்ளதை கொண்டு வருவதாக கூறுவான். சில சமயங்களில் இந்த முயற்சி ஆபத்தில் முடிவதும் உண்டு.
👉57) ஒரு காளையினைத் துரத்தி அடக்கும் செயலின் போது காயம் அடைவதைக் கள்ளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழிவாகக் கருதுவர்.
👉58) திண்டுக்கல்லில் நடைபெறும் சல்லிக்கட்டின்போது கள்ளர்களே பூசாரிகளாக செயல்பட்டு அங்குள்ள தெய்வத்திடம் குறி கேட்கும் உரிமை உடையவர்கள். இச்சமயத்தில் அவர்கள் உரோமானிய வேளாண்மைத் தெய்வத்தின் பூசாரிகளைப் போல பிராமணர்களைவிட உயர்ந்தவர்களாக தங்களைக் கருதி குறி சொல்வர்.
👉59) சல்லிக்கட்டு விளையாட்டில் தீரமிக்க சாதியான கள்ளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். பல ஊர்களில் தனியாக இதற்கென்றே சாதிக் காளைகளை கள்ளர்கள் வளர்க்கின்றனர். கள்ளர்கள் வாழும் பகுதியான திருமங்கலத்தில் மிகச் சிறந்ததான சல்லிக்கட்டைக் காணலாம். இதற்கு அடுத்தபடியாக மேலூரிலும் மதுரை மாவட்டங்களிலும் நடைபெறும் சல்லிக்கட்டைக் கூறலாம்.
👉60) காளைகளைக் கட்டி வீழ்த்துவதில் கள்ளர்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.கள்ளர்கள் இந்த விளையாட்டுக்கான காளைகளைத் தாங்களே பயிற்சி தந்து வளர்த்து வருவதோடு அவ்வப்போது ஜல்லிக்கட்டையும் ஏற்பாடு செய்வர். ஜல்லிக்கட்டுகள் பொங்கலின் போது தொடங்கி  மே மாதம் வரை நடைபெறும்.
👉61) அஞ்சாமையும் கட்டுப்பாட்டு உணர்வும் மிக்க மக்களுக்கு உரிய ஆட்டமான ஜல்லிக்கட்டில் மறவர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
👉62) கள்ளர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் வயல்களில் இருந்து வறட்டிக்காகச் சாணத்தை எடுப்பதையும்,  குடிநீருக்கான ஊருணிகளில் இறங்கி அவற்றின் தூய்மையைக் கெடுப்பதும் போன்ற சிறு குற்றங்களையும் கைவிடுவதாக இவர்கள் எடுத்துள்ள முடிவுகள் மற்ற சாதியாருக்கும் சிறந்து வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
👉63) கள்ளர்களிடம் காணப்படும் நற்பண்புகளில் போற்றுதலுக்கு உரிய சில விஷயங்களும் உள்ளன. கற்புடைமை பேணும் பெண்களின் ஒழுக்க நெறிப்பட்ட நடத்தையும்,  வீட்டையும் ஊரையும் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மை பேணிக் காப்பதும், அளவோடு குடிப்பதுமான பழக்கமும் அவற்றுள் குறிப்பிடத்தக்கது. கள்ளர்கள் வாழும் ஊரில் உள்ள கள்ளுக்கடையால் லாபம் அடைவது மிக அரிது.
👉64) கருப்பன் கள்ளர்களுக்கு உரிய தெய்வம். அதிலும் மேலூரைச் சார்ந்த கள்ளர்களுக்கு அவர் மிகச் சிறப்பான உரிமை உடையவர். கருப்பருக்கு கள்ளர் அல்லது குயவர் சாதியை சேர்ந்தவர்களே அவருக்கு பூசாரியாக இருப்பர்.
👉65) கள்ளர் சாதியை சேர்ந்தவர்களே அழகர்கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்.
👉66) அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு செல்லும்போது கள்ளன்போல் வேடம் தரித்து அச்சாதிக்குரிய தொங்கும் காது மடல்களை உடையவராகக் கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைத்தடியையும் குறுந்தடியையும் ஏந்திச் செல்வது வழக்கம்.
👉67) அழகர்கோயிலில் குடி கொண்டு இருக்கும் அழகரை கள்ளர்கள் வழிபடுதெய்வமாக ஏற்றுக்கொண்டதோடு தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் போதெல்லாம் அழகருக்கு சிறப்பான சமய சடங்குகளை நிறைவேற்றி வந்தனர். 
👉68) அழகர்கோயில் கள்ளர் ஒரு முறை மதுரை நாயக்கர் அரசு மீது ஆநிரை கவரும் வெட்சிப்போர் நடத்தி இளவரசருக்கு உரிய பசுக்கூட்டத்தை கவர்ந்து வந்தனர்.  இதனையடுத்து இளவரசர் கன்றுகள் பாலின்றி தவிப்பதால் அவற்றை அவிழ்த்து பசுக்கள் இருக்கும் இடத்திற்கு விரட்ட ஆணையிட்டார்.
👉69) இளவரசரின் நல்ல எண்ணத்தைக் கண்ட கள்ளர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடம்  வீட்டிற்கு ஒரு பசுவைப் பெற்று அதோடு தாங்கள் கவர்ந்து வந்த பசுக்களையும் சேர்த்து மதுரைக்கு ஒட்டிவிட்டனர்.
👉70) மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது அழகரின் தெய்வ உருவம் மதுரைக்கு எடுத்து வரப்படும்போது மூன்று இலட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கள்ளர்களே. இந்தத் திருவிழாவில் கள்ளழகரின் தேர் வடம் பிடிக்கும் முதலுரிமை கள்ளர்களுக்கே உரியதாய் உள்ளது. 
👉71) சிறுகுடி நாட்டு கள்ளர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்தின் பெயர்களான ஆண்டி,மண்டை, அய்யனார், வீரமாகாளி போன்றவற்றை தங்களது பெயர்களாகவும் கொண்டுள்ளனர்.
👉72) வெள்ளளூர் நாட்டுக் கள்ளர்கள் வேங்கப்புலி, வெக்காலிப்புலி,செம்புலி, சாமிப்புலி,சம்மட்டி மக்கள், திருமான், சாயும்படைத்தாங்கி போன்ற பல பிரிவுகளை தங்களுக்குகள் கொண்டுள்ளனர்.
👉73) கள்ளர் பெண்கள் சிறிது பழி ஏற்படும்படி நடத்தப்பட்டாலும் பின் விளைவுகளைப் பற்றி சற்றும் எண்ணிப் பாராமல் கொதித்து எழுந்து பழிக்குப் பழி வாங்குவர்.
👉74) ஒரு மறவன் அந்நியன் ஒருவனுடைய வீட்டில் உணவு உண்ண நேர்ந்தால் உணவில் சிறிது மண்ணையும் போட்டு உண்ணும் வழக்கம் உடையவன்.தனக்கு உணவு அளிக்கும் குடும்பத்திற்கு எந்த தீங்கும் செய்யாமல் இருக்க உறுதி ஏற்றுக் கொள்ள இவ்வாறு செய்துக் கொள்கின்றனர்.
👉75)  கொண்டையங்கோட்டை மறவர்களில் இயற்கையாக மரணம் அடையாத ஒருவரின் மண்டை ஒட்டை அடக்கம் செய்து சில மாதங்கள் கழித்து மீண்டும் தோண்டி எடுப்பர். பிறகு அந்த மண்டை ஒட்டினை வெட்ட வெளியில் ஒரு கொட்டகையின் கீழ் வைத்து தாராளமாக கள்ளினைக் குடித்து மண்டை ஒட்டை சுற்றி நடனம் ஆடுவார்கள். இவ்வாறு மூன்று நாட்கள் ஆடிய பின் இறுதி சடங்குகளை நடத்துவர்.
👉76) சிவகங்கை சமீனை சுற்றி பதினான்கு கள்ளர் நாடுகள் உள்ளன.அவற்றுள் உள்ள உஞ்சனை, செம்பொன்மாரி, இறவுசேரி, தென்னிலை ஆகிய நான்கு நாடுகளும் ஒரு குழுமமாக உள்ளன.
👉77) சிவகங்கையை சேர்ந்த நாட்டார் கள்ளர்கள் கிளை அல்லது பிரிவு எனப்படும் புறமணக் கட்டுப்பாடு உள்ள கிளைகளாக பிரிவுப் பட்டுள்ளனர்.அவை மறவர்களிடையே வழக்கில் உள்ளதைப் போல பெண்கள் வழிப்பட்டவை. 
👉78) கள்ளர்கள் வழக்கமாக சூட்டிக் கொள்ளும் பட்டப்பெயர் அம்பலக்காரன்.சிலர் மறவர் மற்றும் அகமுடையார்களைப் போல தேவர் மற்றும் சேர்வை பட்டங்களையும் பயன்படுத்துகின்றனர்.
👉79) கீழநாட்டு கள்ளர்களிடையே ஒவ்வொரு ஊருக்கும் பரம்பரையாகத் தலைமை ஏற்று நடத்தும் அம்பலக்காரன் எனும் சாதித் தலைவன் உள்ளான்.
👉80)  கள்ளர் நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது காதுகளைத் துளையிட்டுக் காதுமடல்கள் தோள்வரை நீண்டு தொங்கும்படியாக ஈயத்தாலான கனமான வளையங்களைக் காதுகளில் தொங்க விட்டுக் கொள்கின்றனர்.
👉81) மறவர் சாதிப் பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போது காது மடல்கள் குத்தப்பட்டு விரிவுடையன ஆகும்படியாக நெகிழ்விக்கப்படுவதால் பெண்கள் நீண்டு தொங்கும் காது மடல்களை கொண்டு இருந்தனர்.
👉82) காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் கைவேல், குறுந்தடி,  குண்டாந்தடி, வளரி ஆகியன ஏந்தி வேட்டை நாய்களோடு தெற்கு நோக்கி வந்து மேலூரில் குடியேறி பிறகு தன்னரசு நாடுகளை உருவாக்கினர்.
👉83) கள்ளர்கள் அப்பகுதியை ஆண்ட அரசினையே கலக்கத்திற்கு உள்ளாக்கும் அளவிற்கு பலம் பெற்று விளங்கினர்.
👉84) மதுரை வட்ட கள்ளர்கள் அழகரை தங்களை முழுமுதற் தெய்வமாக வணங்குகின்றனர். அழகர் கோயிற் பணிக்காகவோ தெய்வச் சடங்குகளுக்காகவோ பணமோ தானியமோ கேட்டு வரும்போதெல்லாம் கள்ளர்கள் தங்களால் இயன்ற கொடையை அளிக்கின்றனர்.
👉85)  கள்ளர்கள் எந்த காரணத்தின் அடிப்படையிலும் அண்டைய அரசுகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை.
👉86) அரசுக்குரிய வரியினைச் செலுத்தும்படி நாயக்கர் அரசு கேட்டால் கள்ளர்கள் மிக ஆணவத்துடன் " வானம் பொழியுது, பூமி விளையுது,  எங்கள் கால்நடை ஏர் உழுகின்றது,  நாங்கள் நிலத்தில் உழைத்து அதனைப் பண்படுத்துகிறோம், நிலைமை இப்படியிருக்க அதன் விளைவுகளை உழைப்பவர் மட்டும் தானே அனுபவிக்க முடியும்? எங்களோடு ஒத்த ஒருத்தனைப் பணிந்து அவனுக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டும் என கூறுவதேன்?  என கேள்வி கேட்டு வரி செலுத்த மறுத்தனர்.
👉87) மேற்கு பகுதி கள்ளர்கள் திருமலை பின்னத்தேவன் என வழங்கப்படும் சாதித் தலைவனுக்கு உட்பட்டவர்கள்.இந்த பரம்பரைப் பெயர் அவர்களுடைய மூதாதையர்களுக்கு திருமலை நாயக்கரால் பல்லக்கு முதலிய பதவிக்கு உரிய அடையாளச் சின்னங்கள் வைத்துக் கொள்ளும் உரிமையோடு கூட மூன்று உதவியாளர்களையும் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
👉88) திருமலை பின்னத்தேவன் வழங்கும் தீர்ப்புக்குக் கட்டுப்பட யாரேனும்  மறுத்தால் முள்ளிடும் சடங்கு நடத்தி அவர்கள் சாதியில் இருந்து விலக்கி வைக்கப்படுவர்.
👉89) பதினெட்டாம் நூற்றாண்டில் காப்டன் ரூம்லே எனும் ஆங்கிலேயர் கள்ளர்களின் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டான். இந்த மோதலில் ஐந்தாயிரம் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
👉90) திருச்சிராப்பள்ளியில் நடைப்பெற்ற போரின் போது கிளைவ், ஸ்டிரிங்கர் லாரன்ஸ் முதலிய ஆங்கிலேயரின் குதிரைகளையும் கள்ளர்கள் சூரையாடினர்.
👉91) தஞ்சையின் எல்லைக்கு அப்பால் மதுரையில் வாழும் கள்ளர்கள் தங்கள் முடியை குடுமியாக முடிந்து கொள்ளும் பழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். அவர்கள் தங்கள் சாதிக்காரர்களையே புரோகிதர்களாக நியமித்துக் கொள்கின்றனர்.
👉92) கள்ளர்களின் ஊர்களில் வழக்கமாக சாதிப் பஞ்சாயத்து சபைகள் உள்ளன. ஒரத்தநாட்டு கள்ளர்களில் அம்பலக்காரன் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பரம்பரை உரிமையாக ஒவ்வொரு ஊரிலும் ஊர்த்தலைவனுக்கு உதவும் காரியஸ்தன் என்ற முறையில் சபையில் அமறும் உரிமை பெற்றவர்கள்.
👉93) கள்ளர்கள் வாழும் ஊர்களில் கள்ளர் சாதித் தலைவன் மற்ற தாழ்ந்த சாதியினரின் வழக்குகளைக் கேட்டறிந்து குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டத்தொகை விதிக்கும் பழக்கம் உள்ளது.
👉94) புதுக்கோட்டையின் எல்லைப் பகுதியில் இருந்து காணப்படும் தெற்கத்திக் கள்ளர்கள் பெண்களைப் போல தலை முழுக்க நீளமான மயிர் வளர்க்கின்றனர்.ஆண்களும் பெண்களும் பனையோலைப் பாம்படங்களை இட்டுக் காது மடல்களின் துளைகளை மிகப் பெரியதாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.
👉95) கள்ளர்கள் மாட்டிறைச்சி தவிர மற்ற விலங்குகளை உண்பதோடு போதை தரும் மது வகைகளையும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் பல ஊர்க் காவலர்களாகவும் , பயிர்த் தொழிலாளர்களாகவும் தொழில் செய்கின்றனர்.
👉96) மதுரை நகரில் சில தெருக்களில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு வீட்டிற்கு நான்கணா என்று கள்ளர் சாதித் தலைவன் வசூலித்துக் கொண்டு காவல் காத்து வந்துள்ளதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
👉97) பல சிற்றூர்களில் காவல் முறைப்படி காவல்காரர்களாக கள்ளர்கள் பலர் இருந்தனர்.காவல் முறைப்படி காவல்காரர்கள் அதற்கான பணம் பெற்று வந்தனர்.
👉98) திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமத்துக் காவலர்கள் பொறுப்பு முழுமையும் மறவர்கள் வசமே இருக்கிறது.
👉99) நல்ல உடல் வலிமையும் துணிவும் கொண்டவர்களான மறவர்கள் திருநெல்வேலியில் பெரும்பான்மையாகவும் செல்வாக்கு உடையவர்களாகவும் உள்ளனர்.
👉100) ஓரு ஊரில் நூறு மறவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பத்துக் குழுக்களாகத் தங்களைப் பிரித்து வைத்து குறிப்பிட்ட பகுதிகளில் காவல் பொறுப்பினை மேற்கொள்கின்றனர்.
மேற்கூறிய தகவல்கள் பிரிட்டீசார் காலத்தில் முக்குலத்தோரின் வீரம் மற்றும் வாழ்வியல் தொடர்பாக நாம் அறிய மிக்க உதவிகரமாக அமைந்துள்ளது.  எட்கர் தர்சனைப் போல பல அறிஞர்களும் முக்குலத்தோரின் சிறப்பியல்புகளைப் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.  வீரமிக்க போர்க்குடிகளாக முக்குலத்தோர் தமிழ் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக இன்றும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதார நூல்கள: castes and tribes of southern india 1906 by edgor thurston vol 1,3,5)
அன்புடன்: சி.சு. சம்பட்டியார்


 

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்