அழகர் திருக்கோயில்

அழகர் திருக்கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியங் கோட்டை எனவும் , வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்கள் உட் கோட்டையை நல மகராசன் கோட்டை என்று இத் தலத்தினைப் பெரியாழ்வார் பாடுவதால் அவர் காலத்திலேயே இக் கோயிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது. இங்குள்ள வெளிக்கொட்டை கி . பி . 14 - ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அரசாண்ட வானாதிராயர்களால் கட்டப்பட்டது . பெரியாழ்வார் குறிப்பிடும் மதில் இரணியம் கோட்டை எனப்படும் உட் கோட்டை மதிலாகும்
வெளிக் கோட்டைப் பகுதி:
இதற்குள் பண்டைக்காலத்தில் பிள்ளைப் பல்லவராயன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட அக்கிரஹாரம் ஒன்று இருந்தது. அது " சமாந்தநாராயண சதுர்வேதமங்கலம் " என்ற பெயருடன் விளங்குகிறது.
வெளிக் கோட்டைப் பகுதியில் சாலையின் கீழ் புறத்தில் தேர் மண்டபம் உள்ளது . அத் தேரின் பெயர் அமைந்துள்ள நாராயணன் என்பதும் தேரோடும் வீதிகளில் ஒன்றின் பெயர் தியாகம் சிறியான் திரி வீதி என்றும் கல்வெட்டுக்களால் அறிகிறோம் .
இரணியன் கோட்டைப் பகுதி:
தேர் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் உட் கோட்டையின் தெற்கு வாசலான இரணியம் வாசலை அடையலாம். இவ் வாசலை தாண்டி உள்ளே நுழைந்தால் இடப்புறம் இருப்பது யானை வாகன மண்டபம் இதன் வடக்கே கோபுரம் அமைந்திருக்கிறது. இக் கோபுர வாசலில் உள்ள கல்வெட்டுகளில் கி . பி . 1513 - ல் எழுந்த விசய நகர மன்னர் கிருஷ்ண தேவ மகாராசாவின் கல்வெட்டே காலத்தில் முந்தியதாகும். எனவே இக் கோபுரம் 16 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது . இக் கோபுர வாசலை மக்கள் பயன் படுத்த முடியாது. எப்போதும் அடைத்துக் கிடக்கும் . இதற்கு முன்னர் பக்கச் சுவர்களோடு கூடிய இரட்டைக் கதவுகள் உள்ளன இவையே பதினெட்டாம் படிக் கருப்பணசாமியாக வழிப்படப் படுகிறது . இதன் எதிரில் உள்ள பதினாறு கால் மண்டபம் ஆண்டாள் மண்டபம் , அல்லது சமய மண்டபம் எனப்படும் , ஆடி , சித்திரை , திருவிழாக்களில் இக் கோயில் ஆச்சாரியர்களான ஆண்டார் இம் மண்டபத்தில் வீற்றிருப்பார். இதற்கு வடப்புறத்தில் உள்ளது கொண்டப்ப நாயக்கர் மண்டபமாகும். இதற்கு வடப்புறம் சென்று மேற்கே திரும்பினால் வண்டி வாசல் என்ற வாசல் காணப் படுகிறது . இதன் வழியாக நுழைந்து மேற்கு நோக்கி சென்றால் எதிராசன் திருமுற்றம் என்று வழங்கப் படும் பரந்த வெளியை அடையலாம்.
எதிராசன் திருமுற்றம்:
இம் முற்றம் ஸ்ரீ ராமானுஜப் பெயரிட்டு வழங்கப்படுகிறது. இம் முற்றத்தின் நடுவில் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. பங்குனி உத்திரத்தில் இங்கு தான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது . இம் மண்டபத்தை விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள் அணி செய்கின்றன. இத் திரு முற்றத்தில் மடங்கள் பல சமயப் பணியாற்றின. அவற்றுள் குறிப்பிடத் தக்கது இராமானுஜர் காலத்தில் ஏற்படுத்தப் பட்ட திருமாலிருஞ் சோலை ஜூயர் மடம் அமைந்திருந்தது. இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்து பல ஜூயர்கள் பட்டங்களை அலங்கரித்து பணி செய்து வந்தனர்.
தொண்டைமான் கோபுரமும் சுந்தரபாண்டியன் மண்டபமும்:
திருக்கல்யாண மண்டபத்தை அடுத்துள்ள தொண்டை மான் கோபுரமும் செல்வத்தூர் காதியந்தர் மகனான தொண்டைமான் என்பவரால் கட்டப்பட்டுள்ளன என்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இந்த கோபுர வாசலை அடுத்து உள்ளே காணப்படும் மண்டபத்தை சுந்தர பாண்டியன் கட்டினான் என்றும் இவனுக்கு பொன் மேய்ந்த பெருமாள் என்றும் பெயர் வருகின்றது.
படியேற்ற மண்டபம்:
கொடிக்கம்பத்தை அடுத்து கருட மண்டபம் ஆரியன் மண்டபம் என்றழைக்கப் படுகிறது. இதற்கு படியேற்ற மண்டபம் என்றும் பெயர் வழங்கப் படுகிறது. இந்த மண்டபத்தை தோமராச அய்யன் மகனான ராகவராஜா என்பவர் கட்டி முடித்தார்.
மகா மண்டபம்:
படியேற்ற மண்டபத்தை அடுத்துள்ளது முனைய தரையன் திருமண மண்டபமாகும். இதற்கு அலங்கார திருமண மண்டபம் என்றும் ஒரு பெயர் வழங்கப் படுகிறது. இம் மண்டபத்தைக் கட்டியவன் மிழலைக் கூற்றது நடுவிற் கூறு புள்ளுர்க் குடி முனையதரையனான பொன் பற்றுடையான் மொன்னப் பிரான் விரதம் முடித்தப் பெருமான் என்று கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.
இராய கோபுரம்:
வசந்த மண்டபத்திற்கு கிழக்கே சற்று தொலைவில் கட்டி முடிக்கப்படாமல் அரை குறையாக ஒரு கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதிலுள்ள ஒரு கல்வெட்டு விசய நகர மன்னர்களின் ஆற வீடு வமிசத்து அரசர்களைக் குறிப்பிடுகிறது. இதன் காலம் கி .பி . 1646 ஆகும் . எனவே கி .பி . 16 - ஆம் நூற்றாண்டு தொடங்கப் பெற்று பாதியிலேயே நின்று விட்டது என்று அறியலாம். இதனை இராய கோபுரம் என்று மக்கள் வழங்குவர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்