திருவாரூர் ஆழித்தேர்

திருவாரூர் ஆழித்தேர் -------நமது ஊர் கோவில்களில் எல்லாம் திருவிழா என்றால், ”தேரோட்டம்” நிச்சயமாக இடம் பெறும். எல்லா ஊர்களிலும் தேர் திருவிழா நடைபெறும். ஊர் கூடி தேரிழுப்பார்கள். இரண்டு வடங்களைக் கொண்டு, காலையில் தொடங்கி, மாலையில் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே என்கிறீர்களா?
ஊர் கூடி இழுத்தால் மட்டும் போதாது, புல்டோசர்கள் நான்கை வைத்து தேர் இழுத்து பார்த்திருக்கிறீர்களா? லாரி, லாரியாக ஸ்லீப்பர் கட்டைகளையும், முட்டுக் கட்டைகளையும் வைத்து அங்குலம் அங்குலமாக தேர் நகர்ந்து பார்த்திருக்கிறீர்களா? ஹைட்ராலிக் ப்ரேக் முறையில் தேர் அசைந்து ஆடுவதை பார்த்திருக்கிறீர்களா? தேர் என்று நிலைக்கு வரும் என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான கூட்டம் காத்திருந்ததை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
மேற்க்கண்ட கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் இல்லையென்றால், நீங்கள் திருவாரூர் ஆழித் தேரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை.
”திருவாரூர் தேரழகு” மாத்திரம் இல்லை. தலைமுறை, தலைமுறையாக, ஆழித் தோரோட்டத்தை நடத்தும் குடும்பங்களுக்கு, ஒரு தவம்.
சுமார் 96 அடி (30 மீட்டர்) உயரம், 360 டன் எடை கொண்ட தியாகராஜரின் ரதம்தான் திருவாரூர் தேர். ஆசியாவின் மிகப் பெரிய தேர்களில் ஒன்று என்று புகழப் படும் ஆழித்தேர் நான்கு நிலைகளை கொண்டது. முதல் நிலை 6 மீட்டர்களும், இரண்டாவது நிலை 1.2 மீட்டர்கள் உயரமும் கொண்டது. மூன்று மட்டும் நான்காவது நிலைகள 1.6 மீட்டர் உயரம் கொண்ட பீட வடிவமைப்பு கொண்டது. இந்த நிலைகளில் தான் தியாகேசப் பெருமான், அம்மையுடன் வீற்றிருப்பார்.
இரும்பு தகடுகள் பொருத்தப்பட்ட தேரினுடைய ஆறு சக்கரங்கள், ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரை நிறுத்த ஹைட்ராலிக் ப்ரேக் முறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவன (BHEL) பொறியாளர்களைக் கொண்டு கையாளப் படுகிறது.
மரத்தினால் ஆன தேரில், அழகிய கலை நயத்துடன் புராணத்திலிருந்து சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மரத்தேரின் மீது, 20 மீட்டர்கள் அளவிற்க்கு, மூங்கில் கம்புகள், தோரணங்கள், தேர் சீலைகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டு, காகிதக் கூழில் செய்யப் பட்ட பிரம்மா தேரோட்டியாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும் நிறுத்தகின்றனர்.
26 டன் எடை கொண்ட அலங்கரிக்கப்படாத தேர், அலங்கரிக்கப் பட்டபின் 360 டன் எடை கொண்ட ஆழித் தேராக உருவெடுக்கிறது. தேரை அலங்கரிக்க மட்டும் 3000 மீட்டர் அளவிலான தேர்சீலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. தேரின் உச்சியில் 1 மீட்டர் உயரத்திற்க்கு கூம்பு வடிவ கலசமும், கொடியும் வைக்கப் பட்டு, 30 மீட்டராக வடிவெடுக்கின்றது. (சென்னை வள்ளுவர் கோட்டம், திருவாரூர் தேர் மாதிரியில் வடிவமைக்க பட்டது)
சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேரிழுக்க, திருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள். நவீன யுகத்தில், பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டு, முன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்க, பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்
ஆழித் தேரின் சிறப்பம்சம், வளைவுகளில் திரும்புவது. ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக் காட்சி. தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்து, நின்ற நிலையிலேயே (முன் நகராமல்) தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள். தேர் திரும்பும் காணொளி இங்கே
ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால், தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் முட்டு கட்டைகள் கூடவே கொண்டுவரப்படும்.
1927-ம் ஆண்டு வாக்கில், தேர் மேற்கு கோபுரத்திற்க்கு அருகில் வரும் போது தீப்பிடித்து எரிந்து போய்விட்டதாகக் கூறுவார்கள். பின்பு புதிய தேர் செய்யப் பட்டு 1947 வரை நடைபெற்ற திருவிழா, சுதந்திரத்திற்க்கு பின் நிதி பற்றக்க்குறையால் நிறுத்தப்பட்ட தேரோட்டம் 1970-ஆம் ஆண்டு வாக்கில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் திரும்ப தொடங்கியது.
”அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம். அதாவது மாசி மாதம் (பிப்ரவரி) அஸ்த நட்சித்தரமன்று கொடியேற்றி, பங்குனி (மார்ச் இறுதி/ஏப்ரல் முதல் வாரம்) ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் ஒட்டி, பங்குனி உத்திர நட்சத்திரன்று சுவாமி தீர்த்தம் கொடுப்பது ஐதீகம்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்