ராஜ ராஜ சோழன்

ராஜராஜ சோழனின் பாட்டி ஊரான, திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில், ராஜராஜன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள், அவரது தாயின் வீரம் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவன் ராஜராஜ சோழன். இவனது புகழை தஞ்சை பெரிய கோவில் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ராஜராஜ சோழன் பிறந்து வளர்ந்து, விளையாடிய ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர். இந்த அரிய தகவல்கள் திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள கல்வெட்டில் தெளிவாக வரையப்பட்டுள்ளன.
ராஜராஜனின் தாய் வானமாதேவி திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர சோழனுக்கு வானமாதேவியை மணமுடித்து கொடுத்தனர். ராஜராஜ சோழன் பிறந்து இரண்டு வயது வரை இங்குதான் தங்கியிருந்தார் என்பது வரலாறு.
இதுகுறித்த அரிய தகவல்கள், ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள் பற்றிய தகவல்கள் கருவறை சுவற்றில் உள்ள கல்வெட்டில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவனது தாயின் பெருமைகள் அடங்கிய கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் கணவர் சுந்தரசோழன் இறந்தார் என்ற தகவல் அறிந்த வானமாதேவி கணவனுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறி உயிர் நீத்தார் என்ற தகவல் அடங்கிய கல்வெட்டு தான் அது. இதனை தொல்லியல் துறையினர் தஞ்சாவூரில் நடைபெறும் ஆயிரமாவது ஆண்டு விழாவில் வைத்தனர்..------------------------------
தொல்லியல் புலவன் டாக்டர் இரா. நாகசாமியின் தொல்சீர் பார்வையில் மாமன்னன் இராச ராசன்.
சீர்மிகு சுந்தரச் சோழரின் செல்வ!
செந்திரு மடந்தை வானவன் தேவி
எழில்மான் பயந்த புலியின் ஏறே!
கரிகால் வளவன் பின்வரு காவல!
ஐப்பசித் திங்கள் சதய நாள் பிறந்தோய்!
அக்கன் குந்தவை அன்பினில் வளர்ந்தோய்!
அருமொழி என்னும் இயற்பெயர் கொண்டோய்!
இராசர் தம்ராசன் எனும்பெயர் ஏற்றோய்!
காந்தளூர் சாலை கலமறுத் துகந்தோய்!
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழமண் டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னி ராயிரமும்
திந்திறல் வென்றி தண்டார் கொண்ட
ராஜகே சரிக் கோவே உந்தன்
வாளொளி படரா நாடும் உளதோ?

வேட்புலம் முதலாய் வென்றியாற் கொண்ட
காடும் நாடும் கல்லும் தெற்றியும்
திணைத் திளியளவே ஆயினும் தவிரா
தூர்தொறும் ஊர்தொறும் ஊன்றியே அளந்து
விளைநிலமிது; விளையா நிலமிது@
இறைதரு நிலமிது; இறைஇலி இதுவென
வளமையின் வகையால் தரம்தரம் பிரித்து
வளநா டுடனே பல்புரம் அமைத்து
பழம்பெயர் தவிர்த்து தன்பெயர் நிறீஇ
மண்டலம் கூற்றம் வளநா டூரென
மண்ணுவ கறியா ஆண்புடன் வகுத்து
வரியி லிடுவோர், வகைபல செய்வோர்
கணக்கர், ஓலை, கண்காண் புரிவோர்
பண்டா ரத்தின் பொத்தக முடையோர்,
பட்டோ வையிடு பூட்சிப் பாட்டம்,
திணைக்க ளத்துடனே, திருவாய்க் கேழ்வி,
நடுவு இருக்கை, நல்லறம் பகர்வோர்,
பெருத்தரம், சிறுகரம், வேளைக் காரர்,
அதிகார கரெனப் பாங்குட நமர்த்தி
ஊர்தொறும் குடவோ லைமுறை நிறுவிய
உலகளந்த சோழ! உன்சீர் இந்த
உலகெலாம் பரவி புலவர்தம் நாவில்
இன்றும் உளதெனில் பிறிதும் உண்டோ
புகழ்தனைப் பெறவே!

தென்னா டுடைய தேவினை நாளும்
தேந்தமிழ் இசையால் பாடிய மூவர்
தேவரங்கள் காணா தொழிய
திருநா ரையூர் நம்பியின் துணையால்
தில்லைப் பதியில் பொல்லாப் பிள்ளை
திருக்கர நீட்ட அறைதனை தெரிந்து
மன்றுள் ஆடும் தௌ¤ தேனுக்கும்
மன்னி அருளும் மலர்க் கொடிதனக்கும்
பதிகம் பாடிய மூவர் தமக்கும்
அன்புடன் திருவிழா அமைவுற எடுத்து
திருந்திய கதவம் திறனுடன் திறந்து
மறைந்த பாக்களை புற்றினில் கண்டு
மறையோர் புகழ இமையோர் வியக்க
இவ்வுல கெங்கும் இசைப்பா தந்த
திருமுறை கண்ட பெரும் புகழ்ச் சோழ!
நின்பெயர்
தமிழ் உளவரியும் திகழ்ந்திடும் அன்றோ!

தஞ்சைமா நகர்தனிலே தரணியெலாம் போற்றவே
தக்கின மாமேருவெனப் பெருங்கோயில் படைத்தனையே
பெருங்கோயில் அதுதனையும் கருங்கல்லால் எடுத்தனயே
கல்எல்லாம் அரும்பணியால் கலைப் பொருளாய் மாற்றினையே!
கலைமிளிர கண்வியக்கும் சிலைவடிவாய் நிறுத்தினையே
சிலைகளையே செகம்புகழ செம்பாலும் வடித்தனையே
கண்கவரும் ஓவியமும் வெண்சுதையில் விளைத்தனையே
எண்ணிலா அணிகலன்கள் எண்ணியே அளித்தனையே
பண்செய்த பயிர்நிலங்கள் நெல்அளக்க விடுத்தனையே
நொந்தாமல் விளக்கெரிய நற்பசுக்கள் கொடுத்தனையே
பதிகங்கள் பாடிடவும் பரதங்கள் ஆடிடவும்
பரிகலன்கள் எடுத்திடவும் பல்கணக்கு எழுதிடவும்
மெய்காத்து நின்றிடவும் பல்லோரை அமர்த்தினையே
உயிர்அனைய தமக்கையுடன் உயர்காதல் தேவியரும்
உந்தானைத் தலைவருடன் உவந்தளித்தோர் கொடைகளையே
கல்லிலே வெட்டிவைத்துப் புதுச்சரிதம் படைத்தோய்நீ!
பரதவள நாடுமே பார்த்திப் புரவலன்நீ!
சொற்கோயில் எடுப்போரும் புனைந்தறியா புகழ்கோயில்
கற்கோயில் என்போமோ! கலைக்கோயில் என்போமோ!
புதியரில் புதியன் நீ! பழையரில் பழையன் நீ!
பண்பன் நீ! அன்பன் நீ! பக்தன் நீ! சித்தன் நீ!
சிவனடி மறவாச் செம்மால்! சிவபாதசேகர!
முத்தமிழ் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச்சோழ!
இத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும்
ஆயிரம் ஆயிரம் அயீரம் ஆண்டே!

தஞ்சை தந்த இராஜ ராஜ!
தரணியில் நிலைப்பாய்!
ஆயிரம் ஆயிரம் ஆயிர மாண்டே!

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்